கனமழை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இதனிடையே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதுபோல், சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகர்ப் பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் சென்னையில் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை, தேனி விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.