நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெறக் கோரிக்கை: அரசு பதில்

இந்தியா

புதுதில்லி: இந்தி நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்ப மகாராஷ்டிர அரசிடம் கேட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. இந்திய அரசின் உயர் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவர் நடிகர் சயீப் அலிகான். இவர் சில மாதங்களுக்கு முன் மும்பை உணவு விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்டார். இது குறித்த வழக்கு ஒன்று, மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அப்போது மும்பை போலீசாருக்கு கடிதம் எழுதியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உள்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தார். அதில், சர்ச்சைக்குரியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகளை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், நடிகர் சயீப் அலிகான் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மும்பை போலீசாருக்கு கடந்த ஆகஸ்டு 20–ந்தேதி கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும், எனவே இந்த விவகாரத்தில் விரைந்து அறிக்கை அனுப்புமாறு மும்பை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.