samskrita nyaya - 2026

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (3): அந்த கஜ ந்யாயம்!

கட்டுரைகள் Featured லைஃப் ஸ்டைல்
samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி -3

தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

“அந்த-கஜ நியாயம்”
பார்வையற்றவன் யானையைப் பார்த்தது போல…!

அந்த: -என்றால் பார்வையற்றவன். கஜம் -என்றால் யானை.

பார்வையற்றவர் சிலர் ஒரு யானையின் அருகில் சென்றனர்.  அது யானை என்று யாரோ சொல்லிக் கேட்டனர். அதனை கையால் தொட்டுப் பார்த்தனர். அவர்களில் ஒருவன் யானையின் காதுகளைத் தொட்டான். மற்றொருவன் யானையின் தும்பிக்கையைத் தொட்டான். மற்றொருவன் யானையின் காலைத் தடவினான். இன்னொருவன் யானையின் வாலைப் பிடித்தான். அவர்களை யானை எவ்வாறு உள்ளது என்று சொல்லுங்கள் என்று கேட்டபோது, பார்வையற்றவர்கள் தாம் தொட்டுப் பார்த்த அவயவங்களைக் கொண்டு தம் அனுபவங்களை விளக்கினர். யானையின் உருவம் பற்றி அவர்கள் தங்களுக்குள் வாதம் செய்யத் தொடங்கினர்.

யானையின் காதுகளை மட்டுமே தொட்டவன் யானை முறம் போலிருக்கும் என்றான். யானையின் காலைத் தடவியன் இல்லை இல்லை யானை தூண் போல் இருக்கும் என்றான். இவ்விதமாக மீதியுள்ளவர்களும் அதன் வால், வயிறு போன்ற உறுப்புகளைத் தொட்டுப் பார்த்த அனுபவத்தைக் கொண்டு யானையின் உருவத்தை வர்ணித்தார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பல் சந்தர்பங்களில் ‘அந்த-கஜ’ நியாயத்தைக் குறிப்பிட்டு பேசுவதுண்டு. “கடவுளின் ஒரே ஒரு மகிமையை தரிசித்தவன் கடவுளைக் குறித்த தன் அனுபவத்தை அதோடு நிறுத்திக் கொள்வான். அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று எண்ணுவான், வாதம் புரிவான்” என்கிறார்.

ஓரளவு மட்டுமே படித்து மேலோட்டமான அறிவு கொண்டவர்கள் ஏதோ சில ஸ்லோகங்களை ஓரளவு புரிந்து கொண்டு தத்துவ ஞானம் வந்துவிட்டது என்று நினைப்பார்கள். பரப்பிரம்மத்தை புரிந்து கொண்டு விட்டதாக கர்வம் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை உத்தேசித்து கூறப்பட்ட பழமொழி இது.

யானையின் அவயவங்களில் ஒவ்வொன்றை மட்டுமே அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் பார்த்ததை விட அந்தப் பெரிய யானை இன்னும் எத்தனையோ விரிந்த வடிவம் கொண்டது. அதேபோல் பரமாத்மாவின் மகிமைகள் சாமானியர்களுக்குப் புரிபடாத அளவு உயர்ந்தவை. அஞ்ஞானிகளின் கற்பனைக்கு எட்டாத விராட் சொரூபம் அது. சாதகர்களுக்கும் ஆன்மீக சாதனையில் பழுத்தவர்களுக்கும் அந்த பரமதத்துவம் புரிய வரும்.

உண்மையில் அனைவரையும் சமமாக பார்க்கும் கண்ணோட்டம் கொண்டது நம் சனாதன தர்மம். சில சுயநலவாதிகள் இந்த உண்மையை அறியாமல் மதமாற்றங்கள், பிடிவாதங்கள், கட்டுக்கடங்காத வன்முறைகள் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நல்ல அறிவை அளிக்கக்கூடியது இந்த ‘அந்த-கஜ’ நியாயத்தின் உட்பொருள்.

elephant and blinds - 2026

மேல்நாட்டு மதங்கள் பிறப்பதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ள சனாதன தர்மம், “ஏகம் சத், விப்ரா: பஹுதா வதந்தி” என்று என்றோ தெளிவாக கூறிவிட்டது.

பார்வையற்றவர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டு வாதத்தில் ஈடுபட்டார்கள். அது போன்ற காட்சிகளே சமுதாயத்தில் காணப்படுகின்றன. சனாதன தர்மம் என்ற யானையைத் தொட்டுப் பார்த்த அஞ்ஞான இருளில் மூழ்கிய அரசாளுபவர்கள் பலரும் இதற்கு உதாரணங்கள்.

மதங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே உள்ள விஞ்ஞானத்திற்கு இவர்கள் மத முத்திரை இட்டார்கள். நாத்திக மேதாவிகள் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை பள்ளிகளில் கற்றுத் தருவதை குற்றமாகக் கருதினார்கள். சமஸ்கிருத மொழிக்கு மதச் சாயம் பூசினார்கள்.

அவசரநிலைப் பிரகடனம் என்ற இருண்ட காலத்தில் அரசியல் அமைப்பில் சேர்த்த ‘செக்யூலரிசம்’ என்ற விந்தையான யானையை போலி மேதாவிகள் தமக்குத் தோன்றிய விதமாக புரிந்து கொண்டு விளக்கவதே ‘அந்த-கஜ’ நியாத்திற்கு சரியான உதாரணம்.

கல்விக் கோவில்களான பள்ளிகளில் கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு வந்தனம் செய்வதை எதிர்ப்பதுதான் செக்யூலரிசம் என்று அறியாமையான விளக்கம் அளிக்கப்பட்டது. வந்தேமாதரம் பாட மாட்டோம் என்பதே செக்யூலரிசம் என்று ஒரு அஞ்ஞானக் குருடன் என்ன்னினான். இவ்வாறு பல உதாரணங்கள் நம் கண் முன் வந்து செல்கின்றன.

அந்த கஜ நியாயம் இது போன்ற பிடிவாதங்களை கண்டிக்கிறது.

“ஈஸாவாஸ்யமிதம் சர்வம்” என்பதை நினைவுபடுத்துகிறது.

கௌண்டிய ஸ்மிருதியில் ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமச்சந்த்ருடு இவ்வாறு விவரிக்கிறார்-

சர்வஜ்ஞ: சர்வக: சர்வ சக்தஸ்சைகோ மஹான் விபு: |
பின்னேஸ்ய நாமரூபாதௌ கல்பிதே மாஸ்து பேத தீ: ||

பொருள்: இறைவன் சர்வஞ்ஞன். எல்லாம் அறிந்தவன். எங்கும் நிறைந்திருப்பவன். சர்வ சக்தி கொண்டவன். உருவமற்றவனாக இருந்தாலும் பிராமா, விஷ்ணு, ருத்திரன், யமன், வருணன், சூரியன் என்று பல பெயர்களோடு அழைக்கப்படுகிறான். இவையனைத்தும் பரமேஸ்வரனுக்கு உள்ள வேறுபட்ட வடிவங்களும் பெயர்களும். ஆனால் பரப்பிரம்மம் மட்டும் ஒன்றே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.