Chinnamanur TNPSC - 2026

TNPSC exam: பஸ் கிடைக்காமல் லேட்டா வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
Chinnamanur TNPSC - 2026

தேனி மாவட்டம் சின்னமனூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத வந்த மாணவர்கள் 9.01 க்கு தேர்வு மையத்திற்கு வந்ததால், தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2வில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வு மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்த நிலையில் இத்தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

அதன்படி தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில்-3,799, உத்தமபாளையம் தாலுகாவில்-6,179, தேனி தாலுகாவில் 16,610 என 21,588 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும் எனவும் 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும், பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு தேர்விற்கு விண்ணப்பித்து மாணவர்கள் தாமதமாக வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது .

ஒன்பது முப்பது மணி அளவில் நடைபெறும் தேர்விற்கு எட்டு முப்பது மணிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கட்டாய உத்தரவு விட்டதால் சின்னமனூர் தேர்வு மையத்தில் 8.59 மணி வரை கேட் திறக்கப்பட்டு, 9.00மணிக்கு மேலே பள்ளி வளாக கதவு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த தேர்வு மையத்திற்கு 9.01 க்கு வந்த மாணவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்காததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கிராமப் பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு வர சரியான நேரத்தில் பேருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்கு 9.01 மணிக்கு வந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனதால் மிகவும் சோகம் அடைந்தனர்.

தேர்வு மையத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத அலுவலர்களிடம் தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவர்கள் கெஞ்சினர். ஒரு நிமிடம் தாமதம் ஆனதால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.

இதுகுறித்து தாமதமாக வந்த மாணவர்கள் கூறுகையில், ” 9.30 மணிக்கு தேர்வு நடைபெறும் என்பதால், நாங்கள் 9 மணிக்கே வந்து விட்டோம் . இந்தப் பகுதிகளில் உள்ள கிராம புறத்தில் இருந்து நாங்கள் தேர்வு எழுத வந்துள்ளோம் .

பேருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால் தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு வந்தடைந்தோம். எங்களது காரணங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் கூட ஒன்பது மணிக்கு மேல் தேர்வெழுத அனுமதி இல்லை என்று எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்தாண்டு தேர்வுக்கு நன்றாக படித்து தேர்வு எழுத வந்த பொழுது தேர்வு எழுத முடியாமல் போனதால் இனி அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.