1745870 gold - 2026

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் நெல்லை அருகே கைது..

நெல்லை
1745870 gold - 2026

துபாயில் இருந்து திருநெல்வேலி வழியாக ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம், கார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் டோல்கேட் பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு வாலிபர் உள்பட 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் ஒரு வாலிபர் தனது ஆசன வாய் பகுதியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்ததும், அங்கிருந்து கார் மூலமாக புதுக்கோட்டை செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டுகளையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நாங்குநேரிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்களிடம் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் 4 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையில் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி தங்க கடத்தல் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட 4 பேரிடமும் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.