பாரம்பரிய ‘அல்வா’ கிண்டலுடன் பட்ஜெட் தயாரிப்புப் பணி துவக்கம்!

இந்தியா

halwa-arun-jaitly புது தில்லி: மத்திய பொது பட்ஜெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் பிரதிகளை எடுக்கும் முன்பாக, வழக்கம் போல் பாரம்பரியமாக நடைபெற்று அரும் ஹல்வா தயாரிக்கும் சடங்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஆவணங்களைத் தயாரிக்கும் பணி, அல்வா செய்து வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பட்ஜெட் ஆவண தயாரிக்கும் பணி தொடங்கும் முன்பு அதனைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அல்வா செய்து வழங்கப்படும். இது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய நிகழ்வு. தில்லியில் நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றார். பொதுவாக, இந்த பட்ஜெட் தயாரிப்பின்போது அதில் பங்கேற்கும் அலுவலர்களும் பணியாளர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போனில் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள இயலாது. மின்னஞ்சல்களையோ வேறு தொடர்பு சாதனங்களையோ பயன்படுத்தவும் முடியாது. மத்திய நிதி நிலை அறிக்கையில் உள்ள விவரங்கள் எதுவும் கசிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதற்காகவே அவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள். நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மட்டும் தங்கள் வீட்டுக்குச் சென்று வர அனுமதி உண்டு. தற்போது, பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பொது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.