
இன்று வெளியான அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் நடந்த 50ஜோடி திருமண விழாவில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛இந்த தீர்ப்பால் திமுக.,வின் ‛பி’ டீமாக இருந்த சில எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாக இன்று மதுரையில் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண விழா மற்றும்50 ஜோடிகளுக்கு திருமணத்தை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பழனிசாமி பேசியதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு வரும் என்பது குறித்து மனதில் அச்சத்துடன் தீர்ப்புக்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன்; கலங்கி இருந்தேன்.
இந்த விழாவிற்கு முன்னதாக ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பாக வரவேண்டும் என வேண்டினேன். அடுத்த சில நிமிடங்களில் அற்புதமான செய்தி வந்தது.
தமிழகத்திலேயே வலிமையான கட்சி அதிமுக; அதன் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகள் போடுகிறது ஆளும்கட்சி. ஈரோடு கிழக்கில் நியாயமான முறையில் தேர்தல் நடக்கவில்லை.
அதிமுக புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் முதல் பார்முலாவை கொண்டுவந்த திமுக, இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை அடைத்துவைத்து 2வது பார்முலாவை நடத்துகிறது.
ஜெயலலிதா, எம்ஜிஆர் என இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்ட அவர், சக்தி மிக்க தெய்வ தலைவர்கள் கொடுத்த வர பிரசாதம் தீர்ப்பு இது எனவும், 1.5 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வந்துள்ளது, இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறினார்.




