ரஜினிக்கு வரவேற்பு; கமலைப் பற்றிக் கேட்டால் பேச்சு மூச்சு இல்லை: இது நடிகர் விசுவின் அரசியல்!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை

சென்னை:
நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினி இருவரும் இப்போது அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் அவர்களைப் பற்றி ஏற்கெனவே கருத்து கூறி அதிர்ச்சி ஏற்படுத்திய நடிகர் விசு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரஜினிக்கு கருத்து கூறியும், கமலுக்கு வாயை மூடியும் நகர்ந்து சென்றார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை வரும் 21ஆம் தேதி, அப்துல் கலாம் நினைவிடமான ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார். அதன் பின்பு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆசி வழங்குமாறு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கன்னு, அரசியல் போட்டியாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பாஜக., பிரமுகரும் நடிகரும் இயக்குனருமான விசு நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாகக் கூறிய அவர், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இப்படி பதிலளித்தார்… “என்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன். ஆனால், கமல்ஹாசன் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்” எனக் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என ஒரு வார இதழில் எழுதிய கருத்துக்கு பதில் அளித்து விமர்சனம் செய்திருந்தார். அப்போது, “உங்களுக்கும் பொழுது போக வேணாமா. யாருமே இல்லை.. தனிக்கட்டை.. வயசும் ஆயாச்சு..” என கிண்டல் அடித்திருந்த விசு, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இப்போது அதே பாணியைப் பின்பற்றி தன் அரசியலை வெளிப்படுத்தியுள்ளார் விசு.

2 thoughts on “ரஜினிக்கு வரவேற்பு; கமலைப் பற்றிக் கேட்டால் பேச்சு மூச்சு இல்லை: இது நடிகர் விசுவின் அரசியல்!”

  1. ஒரு அய்யருக்கு இன்னொரு அய்யரை பிடிக்காது. உதா: ஜெ ஜெ – சு சாமி , ஜெ ஜெ – பா. சிதம்பரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.