madurai chithirai meenakchi amman - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

நலவாழ்வு துணுக்குகள் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai chithirai meenakchi amman - 2026

— டாக்டர் BRJ கண்ணன் —

மதுரை மீனாட்சி அம்மன்–சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் தரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.

இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களாகிய நமக்கு மனதுக்கு உகந்த விஷயம். கூடிக் களித்து நாம் அனைவரும் அந்தத் தாயின் அருள் ஆசியைப் பெறுவோம். அதே சமயம் இந்தப் பதிவு இவ்வாறாக வரப்போகும் பெரும்பாலானவர்களுக்கானது அல்ல. மருத்துவத்துறையில் வல்னரபில் பாப்புலேஷன் (vulnerable population) அதாவது உடல் பாதிப்பு வரக்கூடிய நபர்கள் என்று எங்களால் கருதப்படும் ஒரு சாரார் குறித்து சொல்வோம். மருத்துவர்கள் ஆகிய நாங்கள் அவர்களைத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது என்பதால் இங்கே இந்த ஒரு சிறிய வேண்டுகோள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது, நீண்ட நேரம் காத்திருப்பது, கூட்ட நெரிசல், வெப்பம், நீர்ச்சத்து குறைவு, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

கோயிலுக்குச் செல்வது மட்டுமே பக்தி அல்ல. தன் உடலையும் உயிரையும் பாதுகாப்பது கூட இறைவனுக்கு நாம் செலுத்தும் மரியாதையே. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.

புதியதாகப் புதுப்பிக்கப்பட்ட மண்டபங்களையும், சிற்பங்களையும், கோயிலின் அழகையும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டம் குறைந்த பிறகு நிதானமாகச் சென்று இரசிக்கலாம்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த வகையினர் திருவிழா தினத்தன்று வீட்டிலிருந்தபடியே மனதில் மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் நினைத்து பிரார்த்திக்கலாமே!

கூட்டத்தில் நின்று ஆபத்தைத் தேடுவதைக் காட்டிலும், பாதுகாப்பாக இருந்து இறைவனை நினைப்பதும் சிறந்த பக்தி. பக்தியும் இருக்கட்டும்… பாதுகாப்பும் இருக்கட்டும். மீனாட்சி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

ஆக என் பரிந்துரைகள்

நான் மேலே குறிப்பிட்ட வல்னரபில் பாப்புலேஷன் கீழ்க்காணும் சிலவற்றை கவனிக்கலாம்.

  • உடல்நிலை சரியில்லையெனில் செல்ல வேண்டாம். குறிப்பாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், மார்பு வலி, கடுமையான பலவீனம் போன்றவை இருந்தால்.
  • உங்கள் வழக்கமான மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்; குறிப்பாக இதயநோய் மற்றும் சர்க்கரைநோய்க்கான மருந்துகள்.

பொதுவான அனைவருக்கும் உள்ள பரிந்துரைகள்

  • நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என்பதால் போதுமான தண்ணீர் குடிக்கவும்.
  • வெயிலில் நிற்க வேண்டிய சூழல் இருந்தால் தொப்பி/குடை, இலகுவான உடை போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
  • சர்க்கரை நோயாளிகள் நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருக்க வேண்டாம்; தேவையான சிற்றுண்டி/உணவை எடுத்துச் செல்லுங்கள். தனியாகச் செல்லாதீர்கள், குறிப்பாக வயதானவர்கள்.
  • குடும்பத்தினரின் தொலைபேசி எண்களை ஒரு சிறிய அட்டையில் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
  • கூட்டத்தில் குழந்தைகளை கண்காணிப்பின்றி விடாதீர்கள்.
  • தள்ளுமுள்ளு ஏற்பட்டால் கூட்டத்தை எதிர்த்து செல்லாமல், போலீஸ்/தன்னார்வலர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்.
  • மயக்கம், மார்பு வலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை, குழப்பம் அல்லது கடுமையான பலவீனம் ஏற்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவ உதவி மையத்திற்கு விரைந்து செல்லுங்கள் . அசௌகரியம் ஏற்பட்டும் சிறிது நேரம் பொறுத்திருந்து தரிசனம் முடித்துவிட்டுப் போகலாம் என்று மட்டும் இருந்து விடாதீர்கள்.

அரசு நிர்வாகமும் மருத்துவக் குழுக்களும் குடிநீர், மருத்துவ முகாம்கள், 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான செய்தி:

“கும்பாபிஷேகத்தைத் தவிர்க்கச் சொல்வது பக்திக்கு எதிரான கருத்தல்ல; குறிப்பாக நோய் அபாயம் உள்ளவர்கள் என்று மருத்துவர்கள் ஆகிய நாங்கள் கருதும் வல்னரபில் vulnerable groups கூட்டத்தில் சிக்கித் தவிப்பதிலிருந்து பாதுகாப்பதே நோக்கம்.” அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை.

மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நம்மை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் நமக்காக 365 நாட்களும் இருக்கிறார்கள். அனைவரும் மீனாட்சி அம்மன் ஆசிகளையும் சொக்கநாதன் அருளையும் பெற்று மகிழ்வோம்.

Dr. BRJ. Kannan, Director of Cardiology – Vadamalayan Hospital, Madurai.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.