புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசுத் துறைகளில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் ஒரு நடவடிக்கையாக, வரி பாக்கி வைத்துள்ளோரின் விவரங்களை புகைப்படங்களுடன் விளம்பரம் செய்யவுள்ளார். இது இப்போதே பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
ஏற்கெனவே மின் கட்டண பாக்கி வைத்திருப்போர் பட்டியலை பத்திரிகைகளில் வெளியிடச் செய்தார் கிரன் பேடி. இதையடுத்து கட்டண பாக்கி வைத்திருந்த பலரும் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதனால், கடந்த ஒரு வார காலத்தில் மின்துறைக்கு ரூ.51 கோடியே 36 லட்சம் கட்டண பாக்கி வசூலாகியுள்ளது.
இந்நிலையில், வரி பாக்கிகளை வசூலிப்பது தொடர்பாக கிரண் பேடி தலைமையில் நடைபெற்ற அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டத்தில் மின்வரி, கலால்வரி, வணிகவரி, சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளை வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கால அவகாசம் முடிந்தும் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் சொத்துகளை ஏலம் விட வேண்டும். சட்ட பூர்வ பரிசீலனைக்கு பிறகு அரசு இதனைச் செய்ய வேண்டும். வரி கட்டாமல் உள்ளவர்களின் நிலத்தில் ஏலம் விடப்படப் போவது குறித்து அவரது பெயருடன் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.
நீண்ட காலம் வரி கட்டாதவர்களின் பெயர்களை ஊடகங்களிலும், துறைகளின் இணைய தளங்களிலும் வெளியிட வேண்டும். இணைய தளங்களில் வெளியிடும் போது வரி கட்டாதவர்களின் புகைப் படத்தையும் வெளியிட வேண்டும்.
வணிகவரித்துறை ஆணையர், ஒவ்வொரு மாதமும் சட்டத்துறை செயலரை சந்தித்து, அரசு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிப்பது குறித்து பேச வேண்டும்.
நிதித் துறைச் செயலர் 15 நாட்களுக்கு ஒரு முறை மறு ஆய்வுக் கூட்டம் நடத்தி, வரிவசூல் தொடர்பாக நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப் பட்டன.




