madurai highcourt - 2026

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!

சற்றுமுன் Featured அரசியல் தமிழகம் மதுரை
madurai highcourt - 2026

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஜீயரை நியமிக்க, அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை; ஜீயர் தேர்வை கோயில் ஸ்தலத்தார்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மதசார்பற்ற அரசு எனக்கூறி கொண்டு, மதம் சார்ந்த வழிபாடு சம்பிரதாயங்களில் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.. இந்தத் தீர்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக, திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் புதிய பீடாதிபதி நியமனம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் வீரராகவன் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் பிறப்பித்த உத்தரவு:

சட்டப்படி ஒவ்வொரு மடத்திற்கும் ஒரு மடாதிபதி இருக்க வேண்டும். மடாதிபதி தன் வாழ்நாளில் தனக்கு அடுத்த வாரிசை நியமிப்பார். ஆனால், வாரிசை நியமிக்காமலேயே மடாதிபதி மரணமடையும் சூழல் ஏற்படலாம். இத்தகைய காலியிடங்கள் ஏற்படும் போது,​வழக்கப்படி புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தில், ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடம் அங்கமாக உள்ளது. மடத்தின் தலைவரான ஜீயருக்கு, பணி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரே கோவிலை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கினார்; இந்த அமைப்பில் ஜீயர் உயர்ந்த இடத்தில் உள்ளார்.

இம்மடத்தின், 50வது ஜீயர் 1989ல் பீடத்தில் அமர்ந்தார்; 2018ல் இறந்தார். அவர் அடுத்த வாரிசை நியமிக்கவில்லை. மடத்தின் மரபு, வழக்கப்படி அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கோவிலின் ‘ஸ்தலத்தார்’கள் எனப்படும் பரம்பரை அறங்காவலர்களுக்கு உள்ளது. முடிவு ஒருமனதாக அல்லது பெரும்பான்மை ஓட்டெடுப்பு மூலமாக எடுக்கப்படலாம்.ஜீயர் இல்லாத சூழலில், அவருக்குரிய அதிகாரங்கள், ‘ஸ்தலத்தார்’களுக்கும், பட்டர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஜீயருக்கு வழங்க வேண்டிய மரியாதைகளை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

ஜீயர் இல்லாததால், அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. அடுத்த ஜீயரை தேர்வு செய்வதற்கான எந்த ஊக்கமும் அவர்களுக்கு இல்லை. தற்போதைய நிலையே அவர்களுக்கு சாதகமாக உள்ளது.’ஸ்தலத்தார்’கள் ஒத்துழைப்பு வழங்காத சூழலில், அறநிலையத்துறை இணை கமிஷனர், அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி, தகுதியான வாரிசை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.அதற்கு பதிலாக, 2021ல் இருந்து விண்ணப்பங்களை கோரும் நடைமுறையை துறை மேற்கொண்டது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருந்தும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை. இதனால் விவகாரம் இங்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ‘6 மாதங்களுக்குள் புதிய ஜீயரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அவரது உத்தரவாதம் ஒரு வகையில் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், கவலையையும் ஏற்படுத்தியது. 50வது ஜீயர், அக்காலகட்டத்தில் கோவிலின் செயல் அலுவலரால், 1989ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.ஜீயரை நியமிப்பதற்காக, அந்த அதிகாரி சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவை பயன்படுத்தியுள்ளார். தற்போது மீண்டும் அதே போன்றதொரு நடவடிக்கையை துறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை நாங்கள் உறுதியாக அனுமதிக்க மாட்டோம்.

இதற்கு காரணம் உண்டு. ஒரு மடாதிபதி அல்லது ஜீயரை தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒரு மதம் சார்ந்த நிகழ்வு. இதை ஒருபோதும் மதச்சார்பற்ற அல்லது நிர்வாக ரீதியான செயலாகக் கருத முடியாது. இத்தகைய நியமனத்தை செய்வதற்கோ அல்லது நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கோ கூட, அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை. ஜீயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, ‘ஸ்தலத்தார்’களுக்கே உரியது.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபரை துறை அங்கீகரிக்கலாமே தவிர, அதற்கு மேல் எந்த அதிகாரமும் இல்லை. ஜீயர் என்பவர் கடவுளின் தொண்டர் மட்டுமே; அவர் கோவிலின் பணியாளர் அல்ல என்பதை வலியுறுத்துகிறோம்.

அவரது அந்தஸ்தை ஒரு கோவில் ஊழியரின் நிலைக்கு குறைக்க முடியாது. அவர், அறங்காவலர்கள் அல்லது கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் தக்கார் ஆகியோரின் ஒழுங்கு நடவடிக்கை அதிகார வரம்பிற்குள் வரமாட்டார்.

அறநிலையத்துறை கமிஷனருக்கு, உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

மரபு வழியாக மடாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் தலையிடுவதற்கோ, ஒரு நிறுவனத்தின் ஆன்மிக தலைவராக அவரது அந்தஸ்தை குறைப்பதற்கோ அந்த அதிகாரங்களை பயன்படுத்த முடியாது.

திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையர், ‘ஸ்தலத்தார்’களை அழைத்து, விரைவில் ஒரு கூட்டத்தை கூட்ட அறிவுறுத்த வேண்டும். தகுதியான நபர்களை, அந்த பீடத்தை அலங்கரிக்க முன்வருமாறு ஸ்தலத்தார்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை முடிவு செய்யும் பொறுப்பை ‘ஸ்தலத்தார்’களிடமே விட்டுவிடுகிறோம். இந்நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். ‘ஸ்தலத்தார்’கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இக்கடமையை செய்ய தவறினால், காப்பாளர் என்ற அதிகார வரம்பின்படி, நீதிமன்றம் தலையிட தயங்காது.இவ்வாறு உத்தரவிட்டனர்.