
தென் மாவட்டப் பயணிகளுக்கு டபுள் ஜாக்பாட்! உழவன், அனந்தபுரி, சிலம்பு மற்றும் குமரி ரயில்களுக்குக் கிடைக்கிறது புதிய LHB சொகுசுப் பெட்டிகள்!
ரயில் பயணங்கள் என்றாலே அலாதி பிரியம்தான், அதிலும் அதிநவீன LHB (Linke Hofmann Busch) பெட்டிகளில் பயணிப்பது கூடுதல் சொகுசு மற்றும் பாதுகாப்பைத் தரும்! தற்போது, தெற்கு ரயில்வேயில் இயங்கும் பல முக்கிய ரயில்களின் பழைய பெட்டிகளை எல்.எச்.பி (LHB) தொழில்நுட்பத்திற்கு மாற்ற ரயில்வே போர்டு மாபெரும் ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.
”Allotment of LHB coaches FY 26-27″ அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கையின்படி, 2026-27 நிதியாண்டில் ஐ.சி.எஃப் (ICF) பெரம்பூர் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள புதிய LHB பெட்டிகளைப் பெறவுள்ள தமிழக ரயில்களின் அதிரடிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சை தரணியை இணைக்கும் உழவன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை மார்க்கமாகக் கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குச் சேர்த்து மொத்தம் 4 ரேக்குகள் (Rakes) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பெட்டிகள் என மொத்தம் 88 புதிய LHB பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரும்.
சிலம்பு (20681/82) & தாம்பரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22657/58):
சென்னை தாம்பரம் முதல் மானாமதுரை வழியே செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட்டுத் தென் தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரி வரை செல்லும் மும்முறை எக்ஸ்பிரஸ் (Tri-weekly) ரயில்களுக்கு மொத்தம் 2 ரேக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 44 புதிய LHB பெட்டிகள் இணைக்கப்படும். தென் தமிழகப் பயணிகளுக்கு இது ஒரு மாபெரும் நற்செய்தி!
சென்னை – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16115/16):
குறுகிய தூரப் பயணமான இந்த ரயிலுக்கு 1 ரேக் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் மற்றும் 2 சேர் கார் பெட்டிகள் உட்பட மொத்தம் 13 LHB பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த LHB பெட்டிகள், பழைய ஐ.சி.எஃப் (ICF) பெட்டிகளை விடப் பாதுகாப்பானவை. சத்தம் குறைவு, அதிர்வுகள் இல்லாத சொகுசான பயணம் கிடைக்கும்


