சென்னை: சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் முறைப்படி இன்று தொடங்கி வைக்கப் பட்டது. சென்னையில் செண்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது ரயில் முனையமாக, தாம்பரம் ரயில் நிலையத்தை அமைச்சர் ராஜன் கோகைன் தொடக்கி வைத்தார். மேலும், தாம்பரம் – திருநெல்வேலி இடையிலான அந்தியோதயா விரைவு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தாம்பரம் – திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16 பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா ரயில் தினசரி இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜன் கோகைன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற ரயில்களைவிட விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும். இருக்கைகளின் மேற்புறத்தில் பைகளைத் தொங்க விடுவதற்காகக் கூடுதல் கொக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. வடிகட்டியுடன் கூடிய குடிநீர்க் குழாய்கள் பெட்டிகளின் இரு புறமும் வாயில் ஓரத்தில் உள்ளன.
நின்று கொண்டு பயணிப்போருக்கு வசதியாக மேலே கைப்பிடிகள் உள்ளன. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பயோ டாய்லெட்கள் உள்ளன. குப்பைகளைப் போட பெரிய கூடைகளும் உள்ளன. பெட்டிகளில் உள்ள எல்இடி விளக்குகள் மின்சாரம் துண்டித்தாலும் ஒளிரும். செல்போன் லேப்டாப் சார்ஜர்கள் வசதியும் உள்ளது.
கோவை- பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் உதய் ரயில்!
கோவை – பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் வைஃபை வசதியுடன் கூடிற உதய் விரைவு ரயிலையும் அமைச்சர் ராஜன் கோகைன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், ரயில் நிலைய இரண்டாவது மூன்றாவது நடைமேடைகளில் லிப்ட் வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
உதய் ரயில், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும். இரண்டு அடுக்கு உதய் ரயில் கோவையில் இருந்து காலை ஐந்தே முக்கால் மணிக்கு புறப்பட்டு பகல் 12.40க்குப் பெங்களூர் சென்று சேரும். பெங்களூரில் பிற்பகல் இரண்டேகால் மணிக்குப் புறப்பட்டு இரவு ஒன்பது மணிக்குக் கோவை வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.





