விற்பனை பிரதிநிதிகள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்திய கொங்கு இளைஞர் பேரவையினர் 7 பேர் சிறையில் அடைப்பு

சற்றுமுன்

கோவை மாவட்டம் ராம்நகர் சென் குப்தா சாலையில் கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவகத்தின்அருகில் தனியார் மருந்து நிறுவனத்தின் மொத்த விற்பனை அலுவலகம் உள்ளது.

நேற்று இந்த அலுவலகத்துக்கு 100–க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரநிநிதிகள் வந்தனர். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை மருந்து விற்பனை அலுவலகத்தின் முன்புறமும், கொங்கு இளைஞர் பேரவை அலுவலகத்தின் காம்பவுண்டு சுவர் ஓரமும் நிறுத்தி இருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் உருட்டுக்கட்டைகளால் அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதைப் பார்த்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பு திரண்டு, இரு சக்கர வாகனங்களை சூறையாடியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் அரிவாள், வாள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் மருந்து விற்பனை பிரதிநிதிகளை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த கும்பல் போலீசாரையும் மீறி மருந்து விற்பனை அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி சூர்ய காந்த் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். எனினும், கும்பல் விடாமல் வன்முறையில் ஈடுபட்டனர். மோதலை வேடிக்கை பார்த்த பொதுமக்களையும் கும்பல் தாக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மருந்து விற்பனை பிரதிநிதிகளை தாக்கிய 7 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதுதொடர்பாக சூர்ய காந்த் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம்(39), கோவை காட்டூரை சேர்ந்த சங்கர்(31), கோபால்(27), சூலூரை சேர்ந்த மணிகண்டன்(26), கரூரை சேர்ந்த சக்திவேல்(30), கருமத்தம்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(25), சேலம் ஓமலூரை சேர்ந்த தினேஷ் குமார்(24) ஆகியோர் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் காவல் துறையினர் 7 பேரையும் கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட7 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் 7 பேரையும் காவல் துறையினர்  கோவை சிறையில்அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.