மழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

onam celebration - 2026

திருவனந்தபுரம்: கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளில் சிக்கியும் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப் பட்டும் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

கனமழை காரணத்தால், இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த இரு தினங்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களை  ரத்து செய்வதாக  மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன்  இதனைத் தெரிவித்தார். அப்போது அவர், ”கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை கேரளா சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது. எனவே இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெறும்” என்றார்.

இந்த வருட ஓணம் பண்டிகை, ஆக.15 நாளை தொடங்கி, வரும் ஆக.27ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை பண்டிகை தொடங்கவுள்ள நிலையில், அரசின் சார்பிலான ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.