திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இங்கே 3 உண்டியல்களில் திருட்டு நடைபெற்றுள்ளது என்று விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கூறியுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்துள்ளது தாடிக்கொம்பு. இங்கே நூறு வருடங்களுக்கு மேல் பழைமையான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழக அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும்.
சௌந்தரராஜ பொருமாள் கோவில், ஆஞ்சநேயர், சௌந்தரவல்லி, தன்வந்திரி, காலபைரவர் உட்பட 10க்கும் மேற்பட்ட சந்நிதிகள் இந்தக் கோயிலில் உள்ளன. நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலைச் சுற்றி 30 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் உள்ளது. பாதுகாப்பிற்காக கோவில் பிராகாரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் பாதுகாப்புக்கென்று இரவு பணி பாதுகாவலர்கள் இரண்டு பேர் உள்ளனர்.
இக்கோவிலில் உள்ள சந்நிதிகள் முன்பாக மொத்தம் 19 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று (14.08.18) காலை கோவில் காவலர்கள் கோவிலைத் திறந்து சுற்றி வந்தபோது தன்வந்திரிப் பெருமாள், லட்சுமி நரசிம்மப் பெருமாள் மற்றும் ஆண்டாள் ஆகிய சந்நிதிகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த 3 ஆளுயர எவர்சில்வர் உண்டியல்கள் மாயமானதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து இக்கோவிலின் செயல் அலுவலர் பொறுப்பு கணபதி முருகனிடம் உண்டியல் மாயமானது குறித்து தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் செயல்அலுவலர் கணபதி முருகன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தாடிகொம்பு அருகே உள்ள குடகனாற்றின் கரையோரத்தில் முட்புதரில் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 3 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது.
கோவிலில் உள்ள சிசிடிவி மேராவை போலீசார் ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த 3 பேர் கோவிலில் இருந்து உண்டியலைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. கடந்த 7ஆம் தேதியன்று அறிநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள 19 உண்டியல்களிலும் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்திய பணம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனவே திருடு போன 3 உண்டியல்களில் பெருமளவு பணம் இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பழைமையான சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உண்டியல்கள் கொள்ளை போனது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.