கடந்த 97 ஆண்டுகளில் இல்லாதவாறு சென்னையில் மழை (நவம்பர் 2015). கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவாறு கேரளாவில் மழை. கடந்த 117 ஆண்டுகளில் இல்லாதவாறு சிம்லாவில் மழை.. – இந்தச் செய்திகளை கடந்து போகுமுன், தண்ணீர் பற்றாக்குறை, பயிர்கள் கருகு கின்றன, நிலத்தடிநீரில் கடல்நீர் புகுந்து உப்பாகிவிட்டது, குடிக்கக்கூட பயன்படுத்த முடியாது, என்ற செய்திகளையும் அருகருகே செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.
பருவநிலை மாற்றங்களின் விளைவுதான் இது. பொதுவாக இந்தியாவில் தென்கிழக்கு, வடமேற்கு பருவக்காற்றுகளே மழைபொழிவை தருகின்றன. பருவமழை என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டில் குறைந்த நாட்கள், ஆனால் அதிக மழையை தருவது. ஆண்டுமுழுதும் சீராக இருப்பதில்லை. அதேபோல் எல்லாப்பகுதிகளுக்கும் சமசீராக இருப்பதில்லை. அதனால்தான் அதிகமழைபொழிவை பெறும் மேகலாயாவிலுள்ள சேரபுஞ்சியில் கூட குடிநீர் தட்டுப்பாடு உண்டு.
பருவநிலை மாற்றங்கள் என்பவை காலசுழற்சிக்குட்பட்டவை. பல குறுகியகால சுழற்சிகள் இணைந்து நீண்டகால சுழற்சியின் பாகமாக அமைகின்றன. தற்போது நடைபெறும் மேகாலயன் காலம் சற்றேறக்குறைய 4200 ஆண்டுகளுக்குமுன் சுமார் 200 ஆண்டுகால பஞ்சமாக ஆரம்பித்தது. இந்த சுழற்சியின் அடிப்படையில் தற்போது அடிக்கடி நிகழும் அதிதீவிர மழைப்பொழிவு ஆண்டுக்குள் பருவமழை காலத்தின் நகர்வு, மழையின் தீவிரம் மாறுதல், ஆகியவற்றையே குறிப்பதாக அமைகிறது.
சரியான நீர்மேலாண்மை திட்டமிடுதல், கிடைக்கும் நீரை சேமித்துவைத்து ஆண்டுமுழுதும் பயன்படுத்துதல், ஓரிடத்தில் அதிகப்படியாக கிடைக்கும் நீரை தரைமேல், தரைக்கீழ் சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்துதல், நீர்மிகு பகுதிகளில் உள்ள நதிகளை, பஞ்சபாதிப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்ல நதிநீர் இணைப்பு திட்டங்களை செயலாக்குதல், வெள்ள மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்தல், முக்கியமாக நதிகளை தேசிய மயமாக்குதல், நாடு முழுதற்குமான ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை திட்டங்கள் மிக அத்தியாவசியம், அவசரம்.
– மு.ராம்குமார்




