மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

13 Aug10 Rameswaram aadi - 2026

ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீத்தார் கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். மறைந்த மூதாதையர்களுக்கு, மஹாளய அமாவாசை நாட்களில் திதி கொடுத்து, புனித தலங்களில் நீராடினால், பாவங்கள் விலகும், குடும்பம் விருத்தி அடையும். சந்ததி சிறக்கும் என்ற நம்பிக்கை ஹிந்துக்களிடையே வழிவழியாக உள்ளது.

இன்று மாஹாளய அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் அக்னி தீர்த்தக் கடலில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையே கடலில் நீராடி, மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு, தீர்த்தத் தலமான ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து வழிபட்டனர்.

இது போல் தீர்த்த தலமான திருக்குற்றாலம் அருவிக் கரையில் நள்ளிரவு முதலே குவிந்திருந்த பக்தர்கள், அருவியில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, குற்றாலநாத ஸ்வாமி கோயிலில் தரிசித்து வழிபட்டனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினர். முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்தனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30க்கு பகவதி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.