தலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின்! சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக் கொடுத்திருக்கலாம்! : ஹெச்.ராஜா

கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
raja h courtallam meet - 2026

கோவை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை எனவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைத்து திறந்துவைக்க செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் சேடிஸ்ட் என கூறியதை மக்கள் ரசிக்கவில்லை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்தார்.

தமிழகத்தில் பிரிவினை சக்திகளுக்கு திமுக அரவணைப்பு தருகிறது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மதிமுக, விசிக ஆகியவற்றுக்கு மேடையில் இடம் தராதது திமுக பொருளாளர் துரை முருகன் கூறியது போல் அக்கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதை காட்டுகிறது எனக் கூறினார்.

வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் நக்சல் ஒருங்கிணைப்பு பணிகள் நடப்பதாக செய்தி வந்துள்ளதாகவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தீய சக்திகளான தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், அர்பன் நக்சல்கள் தடுக்கின்றனர் எனவும் கூறிய அவர், நக்சல் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை பெற தமிழக அரசு தயங்க கூடாது என்றும் கூறினார்.

ஈவெரா வழி வந்தவர்கள் கோவில்களை அழித்தார்கள்; வெட்கம் கெட்ட உப்பு போட்டு தின்னாத கும்பல் உள்ள துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது! கோவில் சிலைகள் மீட்கப்பட்டதாகக் கூறும் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சிலைகள் எப்படி திருடப்பட்டது என்பதையும் கூற வேண்டும் என்றார்.

பெரியார் குத்து பாடலில் நடிகர் சிம்பு விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு, தாய் நாடு, தேச பக்தி, மதம் பற்றி விமர்சித்தால் பதில் சொல்வேன், இதுபோன்ற சில்லரைத்தனத்திற்கு பதில் சொல்ல முடியாது என்றார் ஹெச்.ராஜா

மத்திய அரசு கஜா புயல் நிவாரண நிதி விடுவிக்காதது தொடர்பான கேள்விக்கு, செய்தியாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா செய்தியாளரை மோடி எதிர்ப்புப் படையின் வழக்கறிஞர் போல பேசுவதாகக் கூறினார்.

மேலும் கஜா புயல் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து இறுதி அறிக்கை மத்திய அரசுக்கு வரவில்லை, ஊடகங்கள் தவறான செய்தியை, அதுவும் திரித்து வெளியிடக் கூடாது என்றார்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஏற்கவில்லை; அக்கூட்டணியில் தலைக்கு தலை நாட்டாமை என்ற நிலை உள்ளது! காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிலையற்ற நபர் என்று கூறிய ஹெச்.ராஜா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைக்க செலவு செய்த நிதியை, கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.