
தென்மாவட்டங்களிலும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இன்று, தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 28 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 15 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பம்ப் ஹவுஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக அந்தப் பகுதி மூடப்பட்டது. மருத்துவமனையில் மூவருக்கு அறிகுறி இருந்த நிலையில், அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
நெல்லையில் மாநகராட்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியில் நகைக்கடை ஊழியர்கள் ஆறு பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மாநகராட்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நெல்லை டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
*நகைக்கடை ஊழியர்கள் ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் வருகிற 15ஆம் தேதி வரை நகைக்கடையை மூட உத்தரவிட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.*
தூத்துக்குடியில் 3 பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா உறுதியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர முயற்சியால் சுமார் 200 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 3 பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும், மற்ற 2 பேர் மயக்கவியல் துறை மருத்துவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கென உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 3 முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானதால் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.