திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம்-16

திருப்பாவை லைஃப் ஸ்டைல்
thiruppavai16 - 2026

நாலாயிரப்படி அவதாரிகை. திருவனந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது.

ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் மூன்று குமாரர்கள் ஸ்ரீ ராமாயணம் கற்றவுடன், அதன் தாத்பர்யத்தை, அதாவது தேர்ந்த கருத்தைச் சொன்னதை ஈண்டு நினைப்பது. ஸ்ரீ ராமாயணத்துக்கு தாத்பர்யமாகச் சொன்னது …

முதல் பிள்ளை: மாத்துரு பித்துரு ஸிக்‌ஷை ஸ்ரீ ராமாயண ஸாரம் என்றானாம்..

அதாவது, தாய் தந்தையருக்கு கைங்கர்யம் பண்ணுவதே ஸ்ரீ ராமாயணத்தில் நோக்கு என்றபடி.

இரண்டாம் பிள்ளை: “ஸரீரம் எடுத்துப் பிறப்பது பொல்லாதது; ஆகையால் அதை அகற்றும் வழியை ஆராய வேண்டும்” என்றானாம்.

மூன்றாவது பிள்ளை: சக்கரவர்த்தித் திருமகனின் கருணை உண்டானால் ஒழிய எவராலும் பிழைக்க வழியில்லை என்றானாம்! ஏதாவது ஸ்ரீராமாயணத்தில், தாய் தந்தை கைங்கரியம் சாமான்ய தர்மம். இரண்டாம் பிள்ளை சொன்னது. இந்த பிறவி என்னும் துன்பத்திலிருந்து நீங்கும் வழியை ஆராய்வது.

இன்னும் விசேஷம் என்றாலும் , அந்த வழி ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீராமபிரானால் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது எதிரியான ராவணப் பையல் இடத்திலும் கருணை கொண்டு அவனையும் ரக்‌ஷிக்க அவகாசம் பார்த்துக் கொண்டிருந்தார் பெருமாள்.

ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாளிடம் சரணாகதி பண்ணிய ராவணனே வந்தாலும் அவனை ஏற்றுக் கொள்ளலாம் என்று பெருமாள் திருவுள்ளம் இங்கு நோக்கத் தக்கது. இறந்த பிறகும் அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று, அவன் இருக்கும் காலத்தில்தான் அதை அவன் தடுக்கும் சக்தி இருந்தது, அவன் இறந்த பிறகு அவனுக்கு நன்மை ஏற்படுவதை அவன் தடுக்க முடியாது அவனுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் மறுத்தபோது இந்த வார்த்தையை ஸ்ரீராமபிரான் தெரிவித்துள்ளது இங்கு நினைக்கத்தக்கது.

மூன்றாவது பிள்ளை சொன்ன தாத்பரியம் சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளின் க்ருபையே நமக்கு காரணம் என்றபடி. இதுவே இராமாயணத்தின் தேர்ந்த கருத்து என்று அவனையே அங்கீகரித்தார் அந்த ஸ்ரீவைஷ்ணவர்.

  • வானமாமலை பத்மநாபன்

குறிப்பு..இதை வார்த்தாமாலையில் 364வது வார்த்தையில் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.