சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம்-திருவள்ளூர்- வட்டப்பாதையில் புறநகர் ரயில்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
17 29July train - 2026

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னை என ஒரு வட்டப் பாதையில் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மார்க்கத்திலும், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்தப் பாதைகளில் பயணம் செய்வோர் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தப் பகுதிகளுக்கான புறநகர் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கும் வகையில் புதிய பாதை அமைத்து புதிய ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தக்கோலம், அரக்கோணம் பாதையில் வரை 10 கி.மீ தூரத்துக்கு புதிய மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் புதிய பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் 110 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த தடத்தில் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் முதல்முறையாக வட்ட பாதையில் மின்சார ரயில்சேவை தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘தில்லி, கொல்கத்தாவில் ஏற்கெனவே வட்டப் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தக்கோலம் – அரக்கோணம் இடையே மின்மயமாக்கல் பாதையுடன் கூடிய புதிய பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், ரயில் சேவை தொடங்க பாதுகாப்பு ஆணையரகம் விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. அதன் பின்னர் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னைக்கு வட்ட பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவையை விரைவில் தொடங்கவுள்ளோம்… என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.