
தமிழ் தாய் வாழ்த்து அரசியல் ஆக்கப்பட்ட நிலையில் தனிக் கவனம் பெற்றுள்ளது. அந்த ஒரு நிகழ்வு, தமிழ் தாய் வாழ்த்து குறித்து பலரும் பேசுவதற்கும் காரணமாகவும் அமைந்துள்ளது. இப்படி தனி கவனம் பெற்றதால் தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை நிகழ்ச்சிகளில் ஒலிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளில் ஒலிக்கச் செய்வதற்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அண்மைக் காலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்கின்றனர். எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.
எனவே, இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது…. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‛தமிழ்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடலே. அப்பாடல் பாடப்படும் போது எழுந்திருந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை’ என குறிப்பிட்டது.
சென்னை மியூசிக் அகாடமியில் 2018 ஜன.24ல் தமிழ் சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா நடந்தது. அந்த அகராதியை அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். காஞ்சி சங்கராச்சார்யர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார் என்று ஊடகங்கள் சர்ச்சை கிளப்பின.
இதை அடுத்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்.இளங்கோ தலைமையில் 12 பேர் ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் செருப்புகளுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது காஞ்சி மடத்தின் மேலாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி கண்.இளங்கோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கண்.இளங்கோ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மனுதாரர் தரப்பில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மடத்தின் மேலாளரிடம் கடிதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை மடத்தின் மேலாளரும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் முடித்து வைக்கப்படுவதாக கருதுகிறேன்.
இந்த வழக்கில் சில விஷயங்களை குறிப்பிட வேண்டும்.
மனுதாரர் தமிழ் ஆர்வலரா என இந்த நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது ஆம் என்றார். அவரிடம் ஐந்து திருக்குறளை தெரிவிக்க கேட்கப்பட்டது. அவரால் கற்க கசடற சொல்ல முடிந்தது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளை கூற கஷ்டப்பட்டார். இதை சுட்டிக் காட்டுவதன் மூலம் மனுதாரரை சங்கடப்படுத்தவில்லை.
இருப்பினும் 1970 ஜூன் 17ல் தமிழ்நாடு அரசு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசுத் துறைகள், கல்வி, உள்ளாட்சி நிறுவன விழாக்களில் தொடக்கமாக நீராருங்கடலுடுத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் பாடலை மோகன ராகத்தில் பாடவும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழ்த் தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல் மட்டுமே. அது கீதம் இல்லை.
மத்திய அரசின் உள்துறை 2015 ஜன.5ல் பிறப்பித்த உத்தரவில் தேசிய கீதம் பாடும்போது பார்வையாளர்கள் எழுந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்களில் படம் திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கவும், அனைவரும் எழுந்து நிற்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இறை வணக்கம் பாடல் தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது பார்வையாளர்கள் எழுந்திருக்க வேண்டும் என இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது பார்வையாளர்கள் எழுந்து மரியாதை தருகின்றனர்.
சமூகத்தில் சந்நியாசிக்கு என சிறப்பு இடம் அளிக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்திலேயே கூட அரசவைக்கு சந்நியாசி வருகிறார் என்றால் மன்னர்கள் இறங்கிச் சென்று வரவேற்றுள்ளனர். சந்நியாசம் ஏற்பது மறுபிறப்புக்கு சமம். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்த நிலையில் தியானத்தில் சந்நியாசியானவர் இருந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் கூட கண்களை மூடிய நிலையில் மடாதிபதி அமர்ந்திருக்கிறார். இதன் மூலம் அவரது வழியில் அவர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை செய்திருக்கிறார்.
மேலும் இம்மனுவில் மனுதாரரும், புகார்தாரரும் சமரசமாக சென்றதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று, நீதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த அகராதி நூல் வெளியீட்டு விழாவை நடத்திய பாஜக மூத்த தலைவர் ஹ.ராஜா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்… அதில்…
எனது தகப்பனார் பேராசிரியர் திரு.ஹரிஹரன் அவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் உடற்கல்வி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தன் பணிக்காலத்தில் அவரும் பேராசிரியர் திரு சி.திருநாராயணன் அவர்களும் இணைந்து Track and field, The Analitical History of Physical Education, Methods in Physical Education, உடற்கல்வி அமைப்பும் ஆட்சியும் முறைகளும், உடற்கல்வி நூல் ஆகிய 5 உடற்கல்வி நூல்களை படைத்தனர்.
1971 ல் Track and Field புத்தகத்திற்கு The best book in India என்று ஜனாதிபதி விருது அளிக்கப் பட்டது.
கல்லூரிப் பணி ஓய்வு பெற்றபின் தமிழ்-சமஸ்கிருதம் சொல்லகராதி (Dictionary) ஒன்றை படைக்க விரும்பினார். ஏனெனில் சமஸ்கிருதம்-தமிழ் Dictionary உள்ளது ஆனால் தமிழ்-சமஸ்கிருதம் Dictionary கிடையாது எனவே இதற்காக 10 ஆண்டுகள் கடும் முயற்சியில் புத்தகம் வெளியீட்டிற்கு தயாரானது.
அதை வெளியிட அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவ்டேகர் சம்மதித்திருந்தார். ஆனால் அதை வெளியிடுவதற்கு திட்டமிட்ட சில நாட்களுக்கு முன் 2017 செப்டம்பர் 30 அன்று தகப்பனார் காலமாகிவிட்ட படியால் புத்தகத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.
எனவே 2018 ஜனவரியில் தமிழகத்தின் அன்றைய மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் அவரது கரங்களால் அதை வெளியிட வேண்டும் என கேட்டேன். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். அந்நிகழ்சியில் ஆசியுரை வழங்க காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ.விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இசைவு தெரிவித்தார்.
அந்நிகழச்சியில் வாழ்த்துரை வழங்க வேண்டும் என பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்களிடம் கேட்டேன். உடனே நிச்சயம் வருகிறேன். என் தாய்மொழி தமிழுக்கு மற்றுமொரு மொழி வரவு என்றார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடப் பட்டது. அப்பொழுது காஞ்சிப்பெரியவர் கண்களை மூடி தியானித்து உரிய மரியாதை செலுத்தினார்.
ஆனால் ஆண்டாள் தாயாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் இழிவு படுத்திய, me too பிரபலம் வைரமுத்து, இந்து சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று கொக்கரிக்கும் திருமாவளவன், மொழியை வைத்து பிரிவினை வளர்க்கும் சீமான், தமிழை காட்டுமிராண்டி மொழி, சனியன் தமிழை படிக்காதே என்ற ஈ.வெ.ரா அடிவருடிகள் தூண்டிவிட்ட காரணத்தால் தமிழகமெங்கும் காஞ்சிப் பெரியவரின் திருஉருவப்படம் வன்முறை வாதிகளால் அவமானப் படுத்தப் பட்டது. சங்கர மடங்களில் இந்துவிரோத தீயசக்திகள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
காஞ்சிப்பெரியவர் தியான நிலையில் இருந்தது பொருத்தமான மரியாதையே என தமிழக உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்துள்ளது. இனியேனும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்து விரோதிகள் நாகரீகமாக நடக்க பழகுவர் என எதிர்பார்ப்போம்… என்று தெரிவித்துள்ளார்.