
திருப்புகழ்க் கதைகள் – 205
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குன்றும் குன்றும் – பழநி
முருகனின் வாகனங்கள் (தொடர்ச்சி)
யாகத்தில் உருவான ஆட்டினால் தேவர்கள் அனைவரும் பயந்து ஓட, எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது.
இந்தத் தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.
அக்கினிக்கு வாகனம் ஆடு. அக்கினி சொருபமான முருகனுக்கு ஆடு வாகனம் பொருத்தம்தானே. மாமரமாக வளர்ந்து நின்ற சூரனை இரு பிளவாக்கி மயிலாகவும், சேவலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகக் கொண்டார்.
திருஞானசம்பந்தர்
இத்திருப்புகழில் திருஞானசம்பந்தரின் மதுரை விஜயம், சமணரை வாதில் வென்றது, அனல் வாதம், புனல் வாதம், சமணர்களை கழுவேற்றியது ஆகியவையும் சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர் முருகப் பெருமானின் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறார். மேலும் அவர் மயிலாப்பூரில் சாம்பலில் இருந்து ஒரு பெண்ணை உயிர்ப்பித்த வரலாறும் கூறப்படுகிறது.

திருமயிலை தலத்தில் சிவநேசர் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்தது. ஒருநாள் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் பூக்களை பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டியது. பூம்பாவை மரணமடைந்த பின்னரும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு ஏற்பட்டது. எனவே அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
சில காலம் கழித்து திருஞான சம்பந்தர் திருவொற்றியூர் வந்திருப்பதை அறிந்த சிவநேசர் அவரை சந்தித்து வணங்கினார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். திருஞானசம்பந்தர் ஆறுதல் கூறினார்.
சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
என்று பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள்.
சம்பந்தரை வணங்கிய சிவநேசர், தனது மகள் பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். கபாலீஸ்வரர் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பெருவிழாவின் 8ஆம் நாளில் நடைபெறுகிறது.