ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
george fernandes - 2026

முன்னாள் மத்திய ராணுவ அமைச்சராக இருந்த சோஷலிஸவாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரக்கல் செய்தியில்…

முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று (29/01/2019) காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்து, அதில் இந்திய அரசு வெற்றி பெற்றது. அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல்கலாம் அவர்களின் துணையுடன், பொக்ரானில் அணுகுண்டு சோதனையையும் நிகழ்த்திக் காட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி கொள்கை ரீதியாக எவ்வளவு மாறுபாடு கொண்டிருந்தாலும் அவரின் நாட்டுப்பற்றை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தி வேண்டுகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல்… திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்…

முன்னாள் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போர்க்குரல் எழுப்பியவருமான திரு #GeorgeFernandes அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது! தலைவர் கலைஞரின் உற்ற நண்பர் – மாபெரும் மக்கள் தலைவர் – என்றென்றும் இவர் புகழ் நிலைத்திருக்கும்! – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.