rajeev chandrasekar1 - 2026

பொறுமையாக இரு எலன் மஸ்க்!

கட்டுரைகள் Featured அரசியல் லைஃப் ஸ்டைல்
rajeev chandrasekar1 - 2026

— ராஜீவ் சந்திரசேகர் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

செயற்கைக்கோள் அலைவரிசை உரிமைக்காக காத்திருப்பது (எலன் மஸ்க்) ஸ்டார் லிங்க் நிறுவனம் மட்டுமல்ல. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சாட்காம் (Jio SatCom) மற்றும் பாரதி நிறுவனத்தின் யூடெல்சாட் ஒன்வெப் ( Eutelsat OneWeb) என்ற இரண்டுடன் சேர்ந்து மூன்று நிறுவனங்கள் உரிமை பெற காத்திருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத் துறையில் மிகவும் சிறப்பான தொழில் செய்பவர்களில் முக்கியமானவர் எலன் மஸ்க் . செயற்கைக்கோள் மூலம் அலைக்கற்றை அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஸ்டார் லிங்க் ஒரு அற்புதம்தான். ஆனால் இந்தியா ‘தரகு முதலாளி’களை பாதுகாப்பதாக அவர் பதிவிட்டது கட்டம் கட்டி குற்றம் சாட்டும் யுக்தி. உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

நான் ஸ்டார் லிங்கை பயன்படுத்தி உள்ளேன். அது அபாரமாக உள்ளது. இந்திய ஒழுங்குமுறை அமைப்பு தரகு முதலாளிகளுக்கு ஆதரவானது என்று மஸ்க் பதிவிட்டதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவரது வாதம் உண்மையுடன் உரசிப் பார்க்கும்போது செத்து விடுகிறது.

உரிமத்துக்காக காத்திருக்கும் மூன்று நிறுவனங்களில் ஸ்டார் லிங்க்கும் ஒன்று. மூன்று நிறுவனங்களும் பாதுகாப்பு தொடர்பான சரிபார்ப்பு மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு என்று ஒரே தளத்தில் நின்று கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோவை பாதுகாப்பதற்காக இந்த முறைமை ஏற்படுத்தப்பட்டிருந்தால் அதொரு வினோதம் எனலாம். ஏனென்றால் ஜியோ சாட்காமும் வரிசையில் நிற்கிறது. ஸ்டார் லிங்க்கு என்ன விதிமுறையோ அதுவே இதற்கும் பொருந்தும்.

செயற்கை அலைக்கற்றை சேவை வழங்குவதில் இந்திய பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்டபூர்வமான தலையீடுகள், சேவைக்கு தேவையான தகுதி, வலைப்பின்னலின் முடிச்சுகள், பூமியில் உள்ள தொடர்பு நிலையங்கள் , இந்திய பயனாளிகளின் விவரங்கள் மற்ற நாடுகளில் உள்ள நிலையங்கள் மூலம் அனுமதி இல்லாமல் அனுப்பக்கூடாது என்பது இந்திய சட்டங்களின் நிபந்தனைகள் . இவை இந்தியாவுக்கு என்று ஏற்பட்ட புதுமையான விஷயங்கள் இல்லை. இது போன்ற விதிமுறைகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டுமன்றி தொலைத்தொடர்பு விஷயத்தை தீவிரமாக கருத்தில் கொள்ளும் எல்லா நாடுகளிலும் உள்ளன.

செயற்கை கோள் மூலம் ஒலிக்கற்றையை அனுப்புவது இப்போதுள்ள புவி ஒலிபரப்பிலிருந்து , தரம் மற்றும் திறன் அடிப்படையில் , வேறானது. இப்போது உள்ள அலைபேசி தொடர்பு கோபுரங்கள் ஒரே இடத்தில் நிலையாக, பார்க்க , கேட்க கூடியதாக உள்ளன. ஸ்டார் லிங்கினுடைய பூமிக்கு அருகில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் வித்தியாசமானவை . இதனூடாக செல்லும் சமிக்கைகள் (சிக்னல் ) மற்றும் அதன் புவி நிலையங்கள் பலவும் இந்தியாவுக்கு வெளியே உள்ளன. எனவே ஸ்டார் லிங்க் இந்திய பயனாளிகளின் விவரங்களை இந்தியாவுக்கு வெளியே உள்ள நிலையங்கள் மூலம் அனுப்பினால் அவற்றை இந்திய அமைப்புகளால் சட்டபூர்வமாக ஒழுங்கு செய்யவோ தலையீடு செய்யவோ முடியாமல் போகும்.

ஸ்டார்லிங்க் உக்ரைன் போரில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. உடனுக்குடன் ரஷ்ய இராணுவ அசைவுகளை உக்ரைனுக்கு கொடுத்தது. இரண்டு அணு ஆயுத நாடுகள் இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கின்றன. அவற்றின் மோதல் போக்கினாலும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. 2017 ஆகஸ்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்கின் செயல்களாக செயற்கை கோள் மூலம் படம் பிடிப்பது, புவிபரப்பை நுட்பமாக அணுகி உணருவது (புவிக்கு அடியில் உள்ள நீர் வளம், கனிம வளங்களை கண்டறிவது) , ராணுவ பயன்பாடுகள் என்று தனது செயல் களத்திற்கான உரிமையை விரிவாக்கி உள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க வான் படை ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. அதன் கருவிகள் அமெரிக்க ராணுவ கொள்கை மற்றும் அதன் போர் கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அலைக்கற்றை வரிசை யதோச்சையாக ராணுவ பயன்பாட்டில் உள்ளன என்று கூற முடியாது. அது இரட்டை நோக்கம் கொண்டு யுக்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள முறையாகும்.

165 நாடுகளில் ஸ்டார் லிங்க் உரிமம் பெற்றுள்ளது என்று எலன் மஸ்க் கூறுகிறார். ஒவ்வொரு நாடும் அததற்கே உரிய பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு பிறகு தான் ஸ்டார் லிங்கிற்கு அனுமதி அளித்துள்ளன என்பதை அவர் சொல்லவில்லை. அந்த நாடுகள் செய்ததையே இந்தியாவும் செய்கிறது.

‘ அம்பானி தான் இந்தியாவின் உண்மையான அதிபரா? ‘ என்று மஸ்க் கேள்வி எழுப்பி உள்ளார். ‘இல்லை’ என்பதுதான் நேரடியான பதில். மஸ்கின் வர்ணனைப்படி ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக தனது ஒழுங்கு முறைமைகளை வடிவமைப்பது 2014 க்கு முன்பு இந்தியாவில் இருந்தது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் , ‘முதலில் வந்தவருக்கு முதல் உரிமை’ என்று உரிமம் வழங்கியதில் முறைகேடெல்லாம் அதனால் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திருத்தங்களை செய்ய முனைந்து தனிப்பட்ட முறையில் இழப்புகளுக்கு ஆளானேன் . அது மோடி அரசு வருவதற்கு முன்பு. மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கையால் நிலைமை மாறிவிட்டன. இன்று இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் வெளிப்படையானதாக, பாதுகாப்பானதாக, நம்பத் தகுந்ததாக, பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அது இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி , பெரியதோ சிறியதோ ஏதாக இருந்தாலும் எல்லோருக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும். இதற்கு நேர் மாறாக முன்பு இருந்ததுதான் தரகு முதலாளித்துவம்.

தங்கள் இறையாண்மையை தீவிரமாக கருத்தில் கொள்ளும் ஜனநாயக நாடுகளின் கொள்கைகளை உலக புகழ், பெரிய பணக்காரர் ஆகியவை எல்லாம் தாக்கம் ஏற்படுத்தாது. இதை புரிந்து கொண்ட முதல் தொழில்நுட்பத் துறை தலைவர் மஸ்க் என்று கூற முடியாது. இந்தியர்கள், இந்தியாவின் தரவுகளை உள்நாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கையை எதிர்த்து மார்க் ஜுக்கர்பெர்க் (மீட்டா) பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டார். ஜெஃப் பெசோஸ் (அமேசான் ) 2020 இல் ஒரு பில்லியன் டாலர் என்ற அறிவிப்புடன் இந்தியாவுக்கு பறந்து வந்தார். பலமுறை வந்தும் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவில் 900 மில்லியன் பேர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய எண்ம பண பரிமாற்றம் நடப்பது இந்தியாவில்தான். உலகில் செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக தடம் பதித்து வருவது இந்தியா. எனவே இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்தியாதான் அதிகம் தேவைப்படுகிறதேயன்றி இந்தியாவுக்கு அவையல்ல.

இந்தியாவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு இது நன்கு புரிந்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம் சிக்கலான உள்ளூர் தேவைகளை பொறுமையாக புரிந்து கொண்டு செயல்பட்டதால் இன்று இந்தியாவில் மிகப் பெரிய மின்னணு பொருள்களை, கருவிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக உள்ளது. இந்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்து ஊக்கத்தொகை திட்டம் பிரபலமாவதற்கு முன்பே சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய உற்பத்தி திறனை இங்கு நிறுவியது . இவர்கள் யாரும் தங்கள் வெறுப்பை எதிர்ப்பை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் முறையாக வழிமுறைகளை பின்பற்றினார்கள் . பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எந்த ஒரு ஒழுங்கு முறைமையுடன் முரண்படாமல் தங்கள் உறவை நீண்ட காலம் தொடரும் வகையில் வலுப்படுத்தி கொண்டார்கள்.

‘ தரகு முதலாளித்துவம்’ என்ற குற்றச்சாட்டு, குறிப்பாக இந்திய தொலைத்தொடர்பு துறையில், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில் இந்திய பொருளாதாரத்தில் இந்த துறைதான் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு சீரியதாக மாறி உள்ளது. இதைக் கூற வேறு எவரையும் விட நானே சிறந்த சான்றாளர்.

இந்த கட்டுரையை ஆரம்பித்த இடத்தில் முடிக்க விரும்புகிறேன். மஸ்க் மீதும் அவர் கட்டமைத்துள்ள ஸ்டார்லிங்க் மீதும் உண்மையான மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். ஸ்டார் லிங்கோ அல்லது ஜியோ சாட்காமோ அல்லது ஒன்வெப்போ எதுவாக இருந்தாலும் அது இந்தியாவில் செயல்பட உரிமை பெறும் நாள் நல்ல நாளாகும். குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புறங்களிலும் தொடர்பு எல்லையில் வீச்சுக்குள் வராத பகுதிகளிலும் திறன்மிகு இணைப்பு வசதி கிடைக்கும். ஆனால் இப்போது மஸ்க் மிக நாராசமான சப்தத்தை எழுப்புகிறார். இது சமிக்கை அல்ல.

இந்தியாவின் சமிக்ஞை மிகவும் எளிமையாக உள்ளது. பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களை தெளிவாக நிறைவேற்று. 165 நாடுகளில் நிபந்தனைகளை நிறைவேற்றியதை போல் இங்கும் நிபந்தனைகளை நிறைவேற்று. இவ்வாறு செய்தால்தான் ஸ்டார் லிங்க் இந்தியாவில் செயல்பட முடியும். ஒரு நிறுவனத்தின் தலைவரின் பதிவு சமூக ஊடகங்களின் வீச்சால் ஒழுங்கு முறைமையை துரிதப்படுத்த முடியாது. அது ஒரு ஆதரவுதான். இன்றைய இந்தியா சமூக ஊடகங்களின் ஆதரவினால் நடத்தப்படுவதில்லை.

எலன், பொறுமை தவிர்க்க முடியாதது. இந்திய மக்களுக்கு, இந்திய பாதுகாப்புக்கு எது தேவையோ அதை கட்டாயம் இந்தியா செய்யும். சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த முறைமையை அது கட்டமைத்து வருகிறது. அந்த முறைமை முழுமை அடையும் போது ஸ்டார் லிங்க்குக்கு அது நன்மை புரியும். அந்த முறைமையை நம்புங்கள்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் முன்னாள் மத்திய இணையமைச்சர். இப்போது பாஜக கேரளா மாநில தலைவராக உள்ளார்