இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்!

இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

சிரியாவை மையமாகக் கொண்டு சில காலம் உலகையே அச்சுறுத்தி வந்த இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்பின் கொடூரமான செயல்களால், மற்ற நாடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இது, இலங்கை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் உடல்களை தாங்கள் பெறப் போவதில்லை என்றும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட (என்டிஜே) பயங்கரவாத குழுவின் தலைவர் குறித்து, 2017ஆம் ஆண்டே இலங்கை முஸ்லிம்கள் தகவல் வழங்கியிருக்கிறோம். இந்நிலையில் அந்த அமைப்பின் மீது எங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் விட்டவர்களே, இந்தச் சம்பவங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்! இப்போது, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன! இந்த நிலையில் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனிடையே, வரகாபொலயில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்குரிய வேன் ஒன்று தொடர்பாக, ஹெம்மாதகமயில் கைது செய்யப்பட்ட மௌல்வியை மேலும் இரு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த வேன் இரு வாரங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், துபையில் இருந்து வந்த குழு ஒன்று, காத்தான்குடி, நீர்கொழும்பு, சிலாபம், கண்டி ஆகிய பகுதிகளுக்கு அந்த வேனில் சென்று வந்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவினர் 20, 21ஆம் தேதிகளில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே, இந்த ஏற்பாட்டின் பின்னணி குறித்து அந்த மௌல்வியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் உதவி இருந்தது என்றும், ஒரு தாமிர தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டு குறித்த அமைப்பிடம் வழங்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியானதால், பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து புகலிடம் பெற்றிருக்கும் சமூகத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து புகலிடம் கோரியிருக்கும் மக்கள் சுமார் 600 பேர், திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இதற்குக் காரணம், வெளி நாட்டு ஊடகங்களில், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப் படுகிறது என்று உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருவதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புகலிடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நீர்கொழும்பு அருகிலுள்ள அஹமதியா மையம் ஒன்றுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...