கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!

சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

cow pooja - 2026

கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய  திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகிக்கு இந்து மக்கள் கட்சி மனு கொடுத்துள்ளது.

இது குறித்த மனுவில்…தருமையாதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களது ஆயுள் விருத்திக் காகவும், நல்வாழ்விற்காகவும் 60, 70 ,80 ,90 ,100 வயது பூர்த்தியாகும் போது சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் போது கோ பூஜை , கஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தம்பதியருக்கு திருமணமும் செய்விக்கப்படுகிறது. அவ்வாறு நமது ஆலயத்தில் நடைபெறும் கோ பூஜையின் போது தனியாக இருக்கும் பசுவிற்கு மட்டும் பூஜைகள் நடப்பதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனைப் படுகின்றனர்.

கோ பூஜை என்றாலே பசுவுக்கும் கன்றுக்கும் நடைபெறும் வழிபாடாகும் . கன்று இல்லாமல் செய்யப்படும் கோபூஜை முழுமையடையாது. நமது வேதங்களில், மந்திரங்களில் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் உள்ளதாக சொல்லப் படுகிறது. “சிசு மத்யே ஜேஷ்ட புத்ரகா ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பால் மடி இல்லாத வறட்டு பசுவிற்கு பூஜை செய்வது புண்ணியம் இல்லாதது .

கன்று இருந்தால்தான் பால்மடி இருக்கும். மேலும் பால் மடியில் உள்ள நான்கு காம்புகளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகிய நதிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

பால் மடி உள்ள பசுக்களை பூஜிக்கும்போது மட்டுமே இந்த நான்கு நதிகளும் மகிழ்ந்து நாட்டிலே தண்ணீர் பஞ்சம் இல்லாத சூழலை உருவாக்கும். கன்றில்லாத பசுவினை பூஜை செய்வது உயிரோட்டமில்லாத வழிபாடாகும்.

மேலும் தங்களது குழந்தைகள் ,பேரன், பேத்திகளோடு கோபூஜை செய்யும்போது பசு மட்டும் கன்று இல்லாமல் இருப்பது பக்தர்களை சங்கடப்படுத்துகிறது. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இல்லாத பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவோ, ஒரு நல்ல நிகழ்வினை தொடங்க சொல்வதோ நமது வழக்கத்தில் இல்லை .

அதை நாம் ஒரு நல்ல விஷயமாக பார்ப்பது கிடையாது. மனிதர்களிடையேயே குழந்தைகள் இல்லாத பெரியவர்களை நாம் வணங்க யோசிக்கும்போது
கோ பூஜையில் கன்றில்லாமல் பசுவை வணங்குவது எப்படி நியாயமாகும்.

நமது திருக்கோயிலில் பல ஆண்டுகளாக கன்றுடன் கூடிய பசுவிற்கே கோ பூஜை நடத்தப்பட்டு வந்தது. இடையில் ஏதோ சில காரணங்களால் கன்றில்லாமல் பசுவிற்கு மட்டும் பூஜை நடைபெறுகிறது.

இது தொடர்பாக திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலர் கூறியும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

ஆகவே, பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் கன்றுடன் கூடிய பசுவிற்கு பூஜை நடைபெற ஆவண செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம் என்று தருமையாதீன மேலாளர், மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோருக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் அதன் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனு அளித்துள்ளார்.

1 thought on “கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!”

  1. பசு வழிபாடு என்றால் கண்டிப்பாக கன்று இருக்க வேண்டும். யானை என்றால் தும்பிக்கை இருந்தே ஆகவேண்டும் என்பது போலத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.