ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி (வயது 46) முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 151ல் வென்றது.
இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 தொகுதிகளில் மட்டுமே வென்றது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஒரே ஒரு தொகுதியில் வென்றது.
இந்நிலையில், இன்று விஜயவாடாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவரைத் தொடர்ந்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.




