நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை! வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin danapal - 2026

தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தற்போது வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், அந்தத் தீா்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூழலுக்கு ஏற்ப அந்தர் பல்டி அடித்துள்ள ஸ்டாலின், தற்போதைய சூழலில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப் போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வெற்றி பெறக் காரணமான கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாலும் எதிர்முகாமுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாலும் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் தனபால் முயற்சி மேற்கொண்டார்.

தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இரு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக., சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு திமுக சார்பில் கடிதம் கொடுத்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லாத் தீா்மானம் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப் பட்டிருந்தது. ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தோ்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினா்களின் எண்ணிக்கையைப் பெற்றது. இதை அடுத்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக.,வுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது.

இதனால், திமுக தரப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தால், அது நிச்சயம் தோல்வி அடையும் என்ற நிலையில், தற்போது திமுக., அதற்காகத் தயங்குகிறது.

எனவே, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், இந்தத் தீர்மானத்தை ஏன் வலியுறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுக.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து இது குறித்து ஸ்டாலின் இன்று கூறுகையில், “அன்று இருந்த சூழலில் சபாநயகா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. தற்போதைய சூழலில் சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப்போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால்தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.