என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

sukisivam q - 2026

என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சாளர் சுகி சிவம், அத்திவரதர் வைபவத்தைக் குறித்து கேலி பேசினார். அடுத்துள்ள கோயில் பெருமாளுக்கு இல்லாத பவர் அத்திவரதருக்கு எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினார். அத்திவரதர் வைபவத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியிருந்தார்.

இது சமூக மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கண்டனங்கள் வலுத்தன. இந்துமுன்னணி அமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ, ஆடியோ பதிவுகளை வெளியிட்ட சுகி சிவம், தற்போது பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

suki sivam statement - 2026அதில் அவர் கூறியிருப்பதாவது…

கடந்த 40 ஆண்டுகளாக தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் நான் செய்துவரும் நற்பணியை நாடு நன்கு அறியும்.  சிவகாசியில் நான் பேசிய ஒரு மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் வெட்டி எடுக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்டு விட்டது.

உண்மையில் முழு பேச்சையும் கேட்டால் இந்து மதத்தின் கர்ம யோகம் ஞான யோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்து இருப்பது புரியவரும். என்றாலும் சொற்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயத்தின் காவல் பணியை வலியுடன் செய்யும் என்னையும் என் பேச்சுக்கு பெருமளவில் கூடும் இந்து சகோதரர்களையும் பிளவுபடுத்தி என்னை தனிமைப்படுத்தும் சதி வேலையை சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என அறிகிறேன். அதனால் காவல்துறை மற்றும் சட்ட உதவியுடன் சதி புரிபவர்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

என்றாலும் என் சொந்த சகோதரர்களாகிய இந்து நண்பர்களுடன் சண்டையிட எனக்கு சம்மதம் இல்லை. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

என்றும் போல் இந்து மதத்திற்கு தொடர்ந்து பணி செய்ய விழைகிறேன். சேர்ந்து பணி செய்ய இந்து நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் தங்கள் அன்புடன்

சுகிசிவம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.