
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் அப்பாஸி. அவர் அந்நாட்டின் பிரதமர்கள் பட்டியலில் 19ஆவது பிரதமர். அப்பாஸியுடன் 46 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் சிக்கினார். இதை அடுத்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த ஊழல் குறித்து உறுதி செய்து, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதை அடுத்து நவாஸ், கடந்த 28ஆம் தேதி பதவி விலகினார்.
பின்னர் பாகிஸ்தானின் புதிய பிரதமராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை அவர் பெற்றார். இதை அடுத்து ஷாகித் கான் அப்பாஸி பிரதமராகப் பதவி ஏற்பது உறுதியானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று காலை பாகிஸ்தான் பிரதமராக அப்பாஸி முறைப்படி பதவி ஏற்றார்.
இஸ்லாமாபாத்திலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் மம்னூன் ஹுசைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் 46 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. காவ்ஜா முகம்மது ஆசிப் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். ஆசன் இக்பால் உள்துறை அமைச்சரவையின் பொறுப்பேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சராக குர்ரம் தஸ்தகீர் பதவி ஏற்றார்.


