
— ஆர். வி. ஆர்
தமிழகத்தில் திமுக-வும் அதிமுக-வும் தான் பல வருடங்களாகப் பெரிய கட்சிகள். பிற மாநிலங்களில் எப்படி இருந்தாலும், தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி.
ஜூலை 2021-ல் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, பாஜக இங்கு சிறிய கட்சி என்ற எல்லையில் முடங்க முடியாமல் துடிக்கிறது. காரணம், அண்ணாமலையின் அரசியல் வல்லமை மற்றும் மக்களை ஈர்க்கும் சக்தி. ஒரு தலைவரிடம் அந்த இரண்டு குணங்கள் இருந்தால்தான் அவர் கட்சி பெரிய கட்சியாக வளர முடியும். அப்படித்தான் அண்ணாத்துரையும் கருணாநிதியும் திமுக-வை நிலை நிறுத்தினார்கள், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுக-வை வளர்த்தார்கள். இந்த ஐவரின் தலைமைக் குணங்களும் நோக்கங்களும் வேறு. ஆனால் இவர்கள் அனைவரும் வல்லமை கொண்ட தலைவர்கள்.
ஒரு கட்சியைப் பெரிய கட்சியாக்கிய தலைவர் மறைந்து அடுத்து வரும் கட்சித் தலைவர் சாதாரணத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை. அதன் பழைய கட்டமைப்பில், பழைய வாசனையில், பின்வரும் பல வருடங்கள் அது பெரிய கட்சியாக மக்கள் மனதில் நீடிக்கும் – இன்றைய திமுக-வும் அதிமுக-வும் மாதிரி.
ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுக, எல்லாவித அதிகார துஷ்பிரயோகத்திலும் முறைகேட்டிலும் ராட்சஸத் தன்மை கொண்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அதில் ஒரு துளி. சட்ட ரீதியாக வதம் செய்யப்பட வேண்டிய கட்சி திமுக. அதற்குப் பதிலாக அதிமுகவோ அதன் தலைமையிலான கூட்டணியோ ஆட்சிக்கு வருவதும் நல்லதல்ல.
ஊழலையும் அரசியல் முறைகேடுகளையும் எதிர்க்கும் கட்சி பாஜக, அது மக்களுக்கு முன்னேற்றமும் நல்லாட்சியும் தரும் கட்சி என்று சாதாரண மக்களிடம் – குறிப்பாக வட மாநிலங்களில் – பெரிதாகப் பெயர் எடுத்திருக்கிறது. இந்தியாவில், ஒரு அரசியல் தலைவன் நல்லவனோ இல்லையோ, அவன் வல்லவன் என்றால்தான் சாதாரண மக்கள் பலரும் ஒரு பணிவில் அந்தத் தலைவனுக்கு, அவனது கட்சிக்கு, வாக்களிப்பார்கள். வல்லமையோடு அவனிடம் நல்லதனமும் தூக்கலாக இருந்தால் அந்த மக்கள் அவனை மனதில் வணங்கிக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் பாஜக-வின் நரேந்திர மோடி கோடானு கோடி இந்திய மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறார். அதே வகையில் பல்லாயிரத் தமிழக மக்கள் மனதை அண்ணாமலை வென்றிருக்கிறார் – இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே.
நாள்தோறும் பெருகிவரும் தனது மக்கள் செல்வாக்கை வைத்து பாஜக-வைத் தமிழகத்தில் ஒரு பெரிய கட்சியாக ஆக்கவேண்டும் என்று அண்ணாமலை ஆசைப் படுகிறார். அதை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். அதைச் செயலாக்க, பாஜக திமுக-வை எதிர்த்தால் போதாது, அதிமுக-வையும் சேர்த்து எதிர்க்கவேண்டும். ஒன்றை மட்டும் எதிர்த்து மற்றதுடன் மாநிலத்திற்குள் கூட்டு வைத்தால், பாஜக-விற்குப் பெரிய கட்சி என்ற அடையாளம் கிடைக்க வாய்ப்பு குறைவு, சேர்ந்திருக்கும் கட்சியும் அதற்கு இடம் தராது.
அண்ணாமலையை உள்ளத்தில் போற்றும் சாதாரண மக்கள், அவர் திமுக-வைத் தில்லாக எதிர்க்கும் திறன் கொண்டவர் என்று நினைக்கிறார்கள், அதை வரவேற்கிறார்கள். அப்படியான மக்கள், அண்ணாமலை அதிமுக-வையும் சேர்த்து எதிர்த்தால் அதை ஆதரிப்பார்கள். காரணம்: ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள் என்ற அடிப்படையில் அதிமுக-வை இன்னொரு திமுக-வாகத்தான், வேண்டுமானால் சற்று சாயம் வெளுத்த திமுக-வாக, அந்த மக்கள் பார்க்கிறார்கள்.
‘அண்ணாமலை என்னதான் நல்லவராக வல்லவராக இருந்தாலும், தேர்தல் சமயத்தில் இரண்டு பெரிய கட்சிகள் பெயரிலும் யாராவது பணத்தை மக்களிடம் வாரி இறைக்கப் போகிறார்கள், அதனால் மக்கள் அந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டு அவை அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்லும். பாஜக பணம் தராது, அதனால் அதிக ஓட்டுக்களைப் பெறாது. பிறகு எப்படி இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றாக எதிர்த்து, பாஜக கணிசமான எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்ல முடியும்? பாஜக அதிமுக-வை எதிர்க்காமல் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான், சில தொகுதிகளையாவது பாஜக ஜெயிக்க முடியும்’ என்ற வாதம் சிலரிடமிருந்து வருகிறது.
சாதாரண வாழ்க்கை வசதிக்கே போராடும் நமது மக்களிடம், யாராவது ஓட்டுக்காகப் பணம் கொடுத்தால், அதுவும் ஆயிரக் கணக்கில் கொடுத்தால், அவர்களின் ஏழ்மை நிலையில் அதை வாங்கிக் கொள்வார்கள். இது போக, ‘நம்மிடமிருந்து எடுத்த பணத்தில் சிறிது நமக்கு இப்படி வரட்டுமே’ என்றும் சிலர் நினைத்து வருவதை வாங்கிக் கொள்வார்கள். பிறகு அரசியலில் எந்தத் தலைவன் வல்லவன் என்று பார்த்து அதற்கு ஏற்பப் பணம் வாங்கியவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக வல்லவன் அதிகப் பணம் கொடுத்து, அந்த வகையிலும் தன் வல்லமையை சாதாரண மக்களிடம் காண்பிக்கலாம். இதை எல்லாம் தாண்டி, மிக வல்லவனான ஒரு தலைவன் மிக நல்லவனாகவும் மக்களால் உணரப் பட்டால், அவனது கட்சியின் சார்பாகப் பணம் தரப்படா விட்டாலும் அவனால் ஈர்க்கப் பட்டு அவனுக்கு வாக்களிக்கும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.
இன்னொன்று. பணம் கொடுத்து மக்களிடம் ஓட்டைப் பெறலாம் என்றாகி விட்டால், எந்த அரசியல் தலைவர்தான் இதை மாற்ற முயல்வது? எப்போதுதான் மக்களின் வாழ்க்கைத் தரம் அரசின் நடவடிக்கைகளால் முன்னேறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, ஓட்டுக்கான லஞ்சம் அவர்களுக்குத் தேவையில்லை, அதைப் பெறுவது கௌரவமல்ல, என்று அவர்களுக்கும் ஒரு அரசியல் கட்சி உணர்த்துவது? கட்டாய சீரழிவுப் பாதையில்தான் தமிழக ஜனநாயகம் போக வேண்டுமா? இதற்கு விடிவே கிடையாது என்று எல்லா அரசியல் தலைவர்களும் நினைப்பதா ?
குயுக்தியான சுயநலத் தலைவர்கள் ஒரு நாட்டை, ஒரு மாநிலத்தை, வீழ வைப்பது எளிது. அது தமிழகத்தில் நடந்து விட்டது. பின்னர் அந்தப் பிரதேசத்தை மீட்டெடுப்பது கடினம். இப்போது ஒரு சரியான தலைவர் மூலமாகத் தமிழகத்தை மீட்க வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக-வையும் சேர்த்து பாஜக எதிர்க்க முடிந்தால், அது அண்ணாமலை போன்ற தலைவர் இருப்பதால்தான் நினைத்துப் பார்க்க முடியும். இதைச் செயலாற்றினால் அது எந்த அளவிற்குப் பயன் தந்து பாஜக-விற்கு எத்தனை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ சீட்டுக்களைப் பெற்றுத் தரும், அது அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால் கிடைக்கும் எண்ணிக்கையை விடவும் குறைவாகப் போகுமா என்று பார்ப்பது ஒரு நடைமுறை அவசியம்தான்.
சென்ற லோக் சபா தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் அதிமுக தலைமையில் ஏழு-கட்சிக் கூட்டணி ஒன்று போட்டியிட்டது. அதில் பாஜக-வும் உண்டு. அந்தக் கூட்டணியில் அதிமுக மட்டும் ஒரு தொகுதி வென்றது, மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை. அதே தேர்தலில் திமுக-வின் ஒன்பது-கட்சிக் கூட்டணி போட்டியிட்டு, 38 லோக் சபா தொகுதிகளை வென்றது. அந்த ஒன்பது கட்சிகள் ஒவ்வொன்றுமே ஒரு தொகுதியிலாவது ஜெயித்தன. அதிலும், தலா ஒரு லோக் சபா தொகுதியில் மட்டும் போட்டியிட்ட திமுக-கூட்டணிக் கட்சிகள் நான்கு, அந்த ஒரு தொகுதியிலும் ஜெயித்தன. அடுத்த வருடம் 2024-ல், மீண்டும் லோக் சபா தேர்தல் வருகிறது.
இப்போது திமுக மெஜாரிட்டியில் உள்ள தமிழக சட்டமன்றத்தில் பாஜக-விற்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அது அதிமுக-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டதில் கிடைத்தது. மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வரும்.
இத்தகைய பலமான திமுக-வை வீரியமாக எதிர்க்கின்ற தமிழக பாஜக, அதிமுக-வையும் சேர்த்து எதிர்ப்பதால் பாஜக-விற்குப் பெரிய நஷ்டமில்லை. இந்தக் காரியம் மிகப் பெரியது, மக்கள் நலன் கொண்டது. அண்ணாமலையின் தலைமையில் பாஜக இதை நினைக்க முடியும், செய்ய முடியும். இந்தக் காரியத்தைத் தானும் செய்து, தமிழகத்தில் மதிப்பிழந்து கிடக்கும் காங்கிரஸ் மீண்டும் இங்கு பெரிய கட்சி ஆக முடியுமா? முடியாது. அதைச் செய்யும் ஆர்வமும் தைரியமும் கௌரவமும் காங்கிரஸ் கட்சியில் இல்லை – மாநிலத்திலோ தில்லியிலோ. ஆனால் இன்றைய பாஜக வேறு ரகம்.
அரசியல் சட்டப் பிரிவு 370 நீர்த்துப் போகும் சட்ட நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு துணிவாக எடுத்தது – தேசத்திற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் அது நன்மை செய்யும் என்பதால். அதன் விளைவுகளைச் சந்திக்கும் ஆற்றலும் மோடி-யிடம் இருக்கிறது. இதே துணிவுடனும் ஆற்றலுடனும் அவர் பாகிஸ்தான் பாலகோட்டிற்குப் போர் விமானங்கள் அனுப்பி அங்கிருந்த பயங்கரவாதிகள் பயிற்சி முகாமைத் தகர்க்கும் முடிவை எடுத்தார். பின்பு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் செய்த அத்துமீறல்களையும் நமது ராணுவத்தின் மூலம் தைரியமாக, சாமர்த்தியமாக, எதிர்கொண்டார்.
இதைப் போன்ற மனோ தைரியம் உள்ள ஒரு கட்சித் தலைமைதான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தமிழக பாஜக ஒரு சேர எதிர்க்கலாம் என்று அண்ணாமலைக்குப் பச்சைக் கொடி காட்ட முடியும். அதை எந்த நேரத்தில் செய்வது, எந்தத் தேர்தலில் செய்வது – 2024-லா, 2026-லா, அல்லது இரண்டையும் பார்த்துவிட்டு 2029-லா – என்ற சிக்கலான கூட்டல் கழித்தல் கணக்கும் கட்சித் தலைமைக்குத்தான் தெளிவாகத் தெரியும். அதற்கு ஏற்ப அதிமுக-வுடனான அணுகுமுறையும் இருக்கும்.
அரசியல் கட்சிகள் எப்போதும் தேர்தல்களை நோக்கி அவர்கள் பாணியில் நகரும். தேர்தல் போட்டிகள், ஒரு செஸ் விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கு நகர்த்துவது என்பது ஒரு கணக்கு, ஒரு கலை. சிறந்த தேர்தல் செஸ் வீரர்கள் பாஜக-வில் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் சமஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, என்ற இரு பெரிய கட்சிகளையும் எதிர்த்து வென்று அங்கு பாஜக-வை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்திலும் வெல்லட்டும், தமிழகத்தையும் மீட்க வழி செய்யட்டும், என்று நாம் விரும்பலாம், அவர்களை வாழ்த்தலாம், காத்திருக்கலாம்.
Author: R. Veera Raghavan, Advocate, Chennai