- வேதா டி. ஸ்ரீதரன்
• எனது வியாபார விஷயமாக நிறையப் பள்ளிகளைத் தொடர்பு கொள்பவன் நான். எனவே, தமிழகப் பள்ளிகளின் கள நிலவரம் குறித்துக் கொஞ்சம் விஷயம் தெரியும்.
• போதைப் பழக்கம் சமீப வருடங்களில் பள்ளிகளில் மிகவும் அதிகரித்திருக்கிறது.
• கொரோனா காலத்தில் இது பூதாகாரமாக வளர்ந்தது.
• முன்பெல்லாம் ஏதோ ரேவ் பார்ட்டி, கல்லூரி மட்டங்களில் சிறிய அளவில் இருந்த நிலை மாறி, தற்போது பள்ளிகள் வரை கஞ்சா சகஜமாகப் புழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
• மேல்மட்ட போதைகளை விடவும் கஞ்சா மிக ஆபத்தானது. காரணம், இது விலை குறைவு. எளிதில் கிடைக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
• சமூக வலைதளங்கள் பெருகியுள்ள நிலைமை, மாணவர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது, பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது முதலிய காரணங்கள் அவர்களை சுலபமாக போதைக்கு ஆளாக்கி வருகின்றன.
• பெற்றோர், ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மாணவர்கள் பெருமளவு விலகி வருகிறார்கள். இது பேராபத்து.
• தனியார் பள்ளி மாணவர்களும் கஞ்சா போதைக்கு விதிவிலக்கல்ல.
• காவல்துறை உதவி இல்லாமலோ, பெரிய அளவிலான நெட்வொர்க் இல்லாமலோ இவ்வளவு பெரிய அளவில் கஞ்சா புழக்கம் ஏற்பட வாய்பபே இல்லை.
• ஶ்ரீ அண்ணாமலை இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது நம்பிக்கை தருவதாய் உள்ளது.
• பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியம்.
• ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் மனநல ஆலோசகர் நியமிப்பது என்று ஒரு மாமாங்கமாகப் பேசி வருகிறார்கள். அப்படியே நியமித்தாலும் அவர்கள் செயல்பாடும் மெகானிகலாகத்தான் இருக்கும்.
• எனது அறிவுக்கு எட்டியவரை நிலைமை கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
• இந்த விஷயத்தில் அரசு ஒத்துழைப்பு அறவே கிடைக்காது. ஆனால், பெற்றோர் – குறிப்பாக, தாய்மார்கள் – ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.
• கட்சியின் மாநிலத்தலைமை இதுகுறித்து சில நூறு பள்ளி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விவரங்கள் சேகரிப்பது நல்லது.
• கட்சிக்கு ஒரு கல்வியாளர் அணி உண்டு. அவர்கள் இந்த விஷயத்தை முன்னெடுக்கலாம்.
• போதைப் புழக்கத்தைப் பள்ளிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு தரப்பினருடன் – ஆசிரியர்கள், மேல் வகுப்பு மாணவர்கள், பள்ளித்தலைமை, பெற்றோர், கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் – விரிவான, ஆழமான விவாதங்கள் மூலம் புரிந்துகொள்வது நல்லது.
• வரும் தேர்தலிலும் இதைப்பற்றிப் பெரிய அளவில் பேச வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், கொரோனா காலகட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் பள்ளிகள் மூலம் பெற்றோர் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள் (பள்ளிகளைத் திறப்பது குறித்து). அப்போது அரசுப்பள்ளிகளில் பெற்றோர் மிக அதிக அளவில் கலந்துகொண்டு, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். (கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதரவு). அரசுப் பள்ளிகளில் 90 சதவிகிதம் பெற்றோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தது நம்ப முடியாத செய்தி. மாணவர்கள் கல்வி குறித்துப் பெற்றோருக்கு உள்ள பயத்தையும், பள்ளிகள் நல்ல விதத்தில் இயங்கினால் மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்ற அவர்களது எதிர்பார்ப்பையும் இது தெளிவாகவே உணர்த்துகிறது.
• எனவே, போதைப்புழக்க விஷயத்திலும் பெற்றோர் ஆதரவு இருக்கும் என நிசசயம் நம்பலாம்.