
— ஆர். வி. ஆர்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.
மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் பற்றி சட்டசபையில் இப்போது மு. க ஸ்டாலின் பேசி இருக்கிறார். “மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால்தான் அவை வளர்ச்சி அடையும்” என்பதும் அவர் வார்த்தைகள். இது தொடர்பாக அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது என்றார் ஸ்டாலின்.
சுயாட்சி என்றால் என்ன அர்த்தம்? ‘நம்மை, நமது பிரதேசத்தை, நாமே ஆள்வது’ என்பது அதன் நேரடி அர்த்தம். ‘மத்திய அரசின் தலையீடு இல்லாமல், தமிழ் நாடே அனைத்து விஷயங்களிலும் தன்னை ஆள வேண்டும் – ஒரு தனி நாடு மாதிரி’ என்ற அர்த்தம் ‘மாநில சுயாட்சி’ என்ற வார்த்தையில் தெரிகிறது. தேவையானால் “ஆமாம், அதுதான் அர்த்தம்” என்று ஓங்கிப் பேசவும், வழக்கு வந்தால் “அதற்கு அர்த்தம் அதுவல்ல. தமிழர்களுக்கு சட்ட ரீதியாக அதிக அதிகாரம் பெறும் மந்திரச் சொல் அது” என்றும் நழுவிக் கொள்ளலாம்.
‘சில குறிப்பிட்ட அதிகாரங்கள் இப்போது மத்திய அரசிடம் இருக்கின்றன. அவற்றை மத்திய அரசிடமிருந்து எடுத்து மாநிலங்களுக்கு மாற்றித் தரவேண்டும்’ என்பதுதான் நடைமுறையில் திமுக கேட்கும் மாநில சுயாட்சியாக இருக்க முடியும். இந்தப் புள்ளியிலிருந்து சில விஷயங்களைப் பார்க்கலாம்.
திமுக விரும்பும் மாநில சுயாட்சி முன்பே கையில் இருந்தால், திமுக தமிழகத்தை ஆண்ட நாட்களில் மக்கள் நலனுக்காக என்னென்ன சாதனைகள் செய்திருக்கும் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முடியாவிட்டால் இப்போது மாநில சுயாட்சி தேவை என்று அவர் பேசுவது ஏமாற்று வேலை.
தெருவுக்கு வந்தும் ஒரு விஷயம் பேசலாம். எல்லா மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மாநிலங்களில் புதிய புதிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமைக்கிறது. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்த அமைப்பே பாராமரிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நல்ல தரம் என்ன, தமிழக அரசு மற்றும் உள்ளாட்சிகள் அமைத்துப் பராமரிக்கும் பல்லிளிக்கும் சாலைகளின் தரம் என்ன? தெரிந்ததுதான். மற்ற துறைகளில் அதிக அதிகாரங்கள் கிடைத்தால் மட்டும் அவற்றை வைத்து ஒரு திமுக ஆட்சி மாநிலத்தில் எதைச் சிறப்பாகச் செய்யும்?
மாநில அரசின் அதிகாரங்களை வைத்து, தமிழக அரசு பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இதில் மத்திய அரசு ஒரு முட்டுக்கட்டையும் போட முடியாது. அதாவது, குடிநீர் வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு வானளாவிய சுயாட்சி உண்டு. நமது மாநில மக்கள் அனைவரும் குடிநீருக்காகக் காத்திருக்காமல், குடம் வாளி தூக்கி அலையாமல், அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கச் செய்துவிட்டதா திமுக? பிறகு எதற்கு மாநில சுயாட்சி?
இப்போதைய திமுக ஆட்சியில், முன்பு இரண்டரை வருடங்கள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போது அவர் வனத்துறை அமைச்சர். பொதுமேடையில் ஒரு மூன்றாம் தர ஆசாமியும் பேசத் தயங்கும் ஆபாசப் பேச்சை அவர் சமீபத்தில் மேடையேறிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மூன்று எம்.ஏ பட்டங்கள், பி.எட் பட்டம், பி.எல் பட்டம், அதோடு பி.எச்.டி பட்டமும் வாங்கியவர். எப்படித்தான் அவர் இத்தனை பட்டங்கள் வாங்கினாரோ – வாங்கியவருக்குத் தான் தெரியும்!
மாநில சுயாட்சி முன்பே கிடைத்திருந்தால் அதன் கீழ் திமுக என்ன செய்திருக்கும்? மாநில சுயாட்சி அதிகாரத்தைக் கண்ணும் கருத்துமாக உபயோகித்து, உண்மையிலேயே கல்வியில் சிறந்த, கண்ணியத்திற்கும் உதாரணமான, ஒரு கனவானைத் திமுக உயர்கல்வித் துறை அமைச்சராக்கி இருக்குமா?
இப்போது பணச் சலவைக் குற்றங்களை (money laundering) விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கையின் படி, இத்தகைய விசாரணையை மாநில அரசே செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசைப் படுவார். அதன் அனுகூலங்கள் அவருக்குத் தெரியும். ஸ்டாலினும் அதையே விரும்புவாரே?
ஸ்டாலின் விரும்பும் மாநில சுயாட்சி அதிகாரங்களை விடக் கூடுதல் அதிகாரங்களை முன்பு கொண்ட ஒரு இந்திய மாநிலம், ஜம்மு காஷ்மீர். அதற்கென்று தனியாக ஒரு அரசமைப்புச் சட்டமே இருந்தது. தனிக் கொடியும் இருந்தது. முன்பு மத்திய ஊழல் தடுப்பு சட்டமும் அங்கு அமல் ஆகவில்லை.
அரசியல் சட்டப் பிரிவு 370 மாற்றம் செய்யப் படுவதற்கு முன், மாநில மஹா சுயாட்சி கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் அதை வைத்து என்ன முன்னேற்றத்தைக் கண்டது, மக்களின் பொருளாதார நல்வாழ்விற்கு என்ன செய்தது? ஒன்றுமில்லை. அந்த சட்டப் பிரிவு முடக்கப் பட்டபின், மத்திய அரசின் உதவியுடன் – ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் – அந்தப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பரவியிருக்கின்றன. அந்த மக்களுக்கான கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள், வருமான வாய்ப்புகள் உயர்ந்திருக்கின்றன. அங்கு சட்டம் ஒழுங்கும் மேம்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வார் ஸ்டாலின்?
தனது அதிகாரங்களை வைத்து மத்திய அரசு ரயில் போக்குவரத்தை நன்றாக நிர்வகிக்கிறது, ரயில்வே நிலையங்களை சிறப்பாகப் பாராமரிக்கிறது. மாநில அதிகாரங்களின் கீழ் பேருந்து நிலையங்களைத் திமுக அரசு எப்படிப் பராமரித்து வருகிறது? லொட லொட அரசு பஸ்களே நமது மாநில அரசு செயல்படும் லட்சணத்தை சத்தம் போட்டுச் சொல்லுமே?
“மாநில அரசுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசைப் போல் அந்த அதிகாரம் எங்களுக்கும் இருந்தால் நிதிப் பிரச்சனை இல்லாமல் மாநிலத்தில் எல்லாப் பணிகளையும் செய்து முடிப்போம்” என்று எந்த அரசியல் தலைவரும் பேசமாட்டார் என்று நாம் பிரார்த்திக்க வேண்டும். அந்த அதிகாரம் தமிழகத்திற்கு இருந்தால், லாட்டரி சீட் மாதிரி ஒரே சீரியல் நம்பரில் எத்தனை ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படுமோ, யார் கண்டது!
ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரின் சிந்தையில் நேர்மையும், செயலில் முனைப்பும், நெஞ்சில் மக்கள் நலனும் இருந்தால் தற்போதுள்ள மாநில அதிகாரங்களை உபயோகித்தே அவர் மாநிலத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்யலாம். திமுக தலைவர்களிடம் அந்த குணங்கள் இல்லை. அதுதான் அவர்களின் உள் கோளாறு – மாநில சுயாட்சி ஜுரம் அவற்றின் ஒரு வெளி அடையாளம். இதுதான் விஷயம்.
மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு மாநிலத்துக்கு அதன் முதல்வரால் சிறந்த ஆட்சி தர முடியாது என்று ஸ்டாலின் நிஜமாகவே நினைக்கிறாரா? அப்படியானால், மத்தியில் பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் நரேந்திர மோடியால் அதே நேரம் குஜராத்தில் எப்படி மிகச் சிறந்த ஆட்சி தர முடிந்தது என்று ஸ்டாலின் தெளிவு படுத்தட்டும்.
மாநில சுயாட்சி ஜுரத்தில் பிதற்றாமல், ஒரு மாநில முதல்வர் பதவியில் இருந்த மோடி எப்படி நாட்டின் பிரதமர் ஆனார் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்வது அவருக்கே நல்லது. பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலினுக்கு அவருடைய கனவு நிறைவேற ஒரு எளிய வழியும் கிடைத்து விடுமே!
Author: R. Veera Raghavan Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com