
- சிஎம். மகாதேவன்
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். யார் இந்த கோரிக்கையை வைத்தார்கள் என்று தெரியவில்லை. கோவைக்கு எதற்காக எய்ம்ஸ் என்பதும் புரியவில்லை.
தமிழகத்துக்கு முதன்முதலில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டபோது, அதற்கான இடமாக கோவை அருகே பெருந்துறை தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பெருந்துறையில் ஏற்கனவே இ எஸ் ஐ மருத்துவமனை இருக்கிறது, மேலும் பெருந்துறை ரயில் மூலம் சுலபமாக சென்றடைய முடியும் என்பதால் முதல் தேர்வாக இருந்தது.
ஆனால் கொங்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை லாபி, பெருந்துறையில் எய்ம்ஸ் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கோவை Education Hub மட்டுமல்ல, மருத்துவத்திலும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று உலகத்தரமான சிகிச்சை அளித்து வருகிறது. கோவை தனியார் மருத்துவமனைகள் கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எய்ம்ஸ் வந்தால் அவர்களது வளர்ச்சி மற்றும் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தான், முதலில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் இடம் மாற்றம் செய்யப்பட்டது என்பது அப்பட்டமான உண்மை. தமிழத்திற்கான எய்ம்ஸ் தாமதமாவதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று.
தற்போது மீண்டும் கோவையில் எய்ம்ஸ் என்று கேட்க ஆரம்பித்ததற்கு பின்னால் திமுகவின் அரசியல் மட்டுமே உள்ளது.
கொங்கு பகுதியில் அதிமுக + பாஜக கூட்டணியை திமுகவால் வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்கும் செக் வைக்கும் வகையில் கோவையில் எய்ம்ஸ் என்ற கோஷத்தை கையில் எடுத்திருக்கிறது திமுக. இப்போது கோரிக்கை வைத்தாலும் அடுத்த பட்ஜெட்டில் தான் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றால் கோவையை புறக்கணிக்கிறது பாஜக எனும் பிரச்சாரத்தை, கொங்கு பகுதியில் முன்னெடுக்க மட்டுமே இந்த கோரிக்கை பயன்படும்.
மேலும் கோவையில் எய்ம்ஸ் என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தனியார் மருத்துவமனைகளில் வசூலில் ஈடுபட திமுகவுக்கு உதவும்.
உண்மையில் தமிழகத்திற்கு இரண்டாவது எய்ம்ஸ் என்பதே சரியான கோரிக்கை. எந்த இடத்தில எய்ம்ஸ் வர வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய முடியும். அப்படி இருக்கும் போது எந்தவித ஆய்வும் இல்லாமல், கொங்கு பகுதியில் இருந்து எந்தவித கோரிக்கையும் இல்லாமல் கோவையை தேர்ந்தெடுக்க காரணமே இல்லை.
தமிழகத்தின் இரண்டாவது எய்ம்ஸ் வடமாவட்டங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைவதே பொருத்தமானதாக இருக்கும். அல்லது ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் அமைக்கலாம்.
கோவை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைகள் சிறந்த உள்கட்டமைப்புகள் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அது போக இங்கு ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்திலும் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது மருத்துவத்துறையில் தன்னிகரற்ற வளர்ச்சி பெற்றிருக்கும் கோவைக்கு எய்ம்ஸ் தேவையில்லை என்பதே என் கருத்து.
அடுத்த ஒரு வருடத்திற்கு இதை வைத்து அரசியல் செய்வதற்காக திமுக இது போன்ற கோரிக்கைகளை முன்னெடுப்பது அபத்தமான அரசியல்.





