
இந்தியா மீது அமெரிக்க விதிக்க இருப்பதாக திரு. டிரம்ப் அறிவித்துள்ள 25% இறக்குமதி வரி குறித்து கவலை கொள்வதற்கு முன் சில விஷயங்களைப் புரிந்து கொள்வது நல்லது.
அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தை வைத்து முன்னேறிய நாடு அது. தங்களை வைத்து வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும், பரஸ்பரமாக அமெரிக்க வளர்ச்சிக்கு உதவவில்லை என்று அதன் அதிபர் கருதுகிறார்.
அமெரிக்காவின் வளம், தொழில்நுட்பம், தாராளமயமான பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு விளைபொருள்களை, உற்பத்தியை, மனித வளத்தை மேம்படுத்திய(தும்) உலகின் பெரும்பாலான நாடுகள், தங்கள் நாடு என்று வரும் போது சமமான போட்டிக்குச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்து விடுவதில்லை என்பது அவர் குற்றச்சாட்டு. அது ஓரளவு உண்மையும் கூட.
உள்ளூர் தொழிற்சாலைகள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக வரி விதித்து தங்கள் நாட்டுச் சந்தையைத் தக்க வைக்கிறார்கள். இதனை உடைக்க அவர் “நீ எனக்கு விதிப்பதை விட உனக்கு அதிக அளவு வரி” எனும் ஆயுதத்தை எடுத்து மிரட்டுகிறார்.
MAGA – Make America Grea Again என்கிற கோஷத்தோடு பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றவர் திரு. டிரம்ப். அவர் முதன்மையில் ஒரு தொழில் அதிபர், பின்னர் தான் அரசியல்வாதி. அவருக்குத் தான் ஆடும் சதுரங்க விளையாட்டுகளில் காய் நகர்த்தல்கள் குறித்த தெளிவு எப்போதும் உள்ளது. அவர் பொது வெளியில் பேசும் சில அசட்டுத்தனமான கருத்துகளும், வேண்டுமென்றே விளைவிக்கும் குழப்பங்களும் கவனத்தைத் திசை திருப்பும் யுக்திகள் என்றே நான் கருதுகிறேன்.
ஒரு வியாபாரியாக அவர் அமெரிக்க தொழில்துறை – முக்கியமாக ஆயுதங்கள் + பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்திச் சந்தை, பால், சோளம், சோயா, உட்பட குறைந்த விலையில் உற்பத்தியாகும் விவசாயப் பொருள்கள், கச்சா எண்ணெய் மற்றும் அதன் உபபொருள்களான எரிவாயு ஆகியவற்றை உலகளாவிய சந்தைக்கு விரிவாக்க விரும்புகிறார். இந்த சதுரங்க ஆட்டத்தில் தனது குதிரைகள், யானைகள், மந்திரிகளைக் காவு கொடுப்பது போல காட்டிக் கொண்டு, எதிரிகளின் பக்கம் பல சிப்பாய்களைக் கொண்டு சென்று ஒவ்வொருவரையும் மகாராணிகளாக மாற்றும் வித்தையைத் திறம்பட மேற்கொள்கிறார்.
இந்தியா மீதான வரி அறிவிப்புக்கு ஒரு நாளுக்கு முன் 27 நாடுகளின் கூட்டமைப்பு கொண்ட தனது வலதுகரமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் தாக்கங்கள் என்ன என்று பார்க்கலாம்.
● ஏற்கனவே 4.8% வரி என்று இருந்ததை மூன்று மடங்கு அதிகரித்து 15% ஆக உயர்த்தி உள்ளார்.
● இதை விடக் கூடுதல் வரியும் சில பொருள்களுக்கு விதிக்கும் சரத்துகளும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
● பிரெஞ்சு பிரதமர் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள் “ஐரோப்பாவிற்கு ஒரு கறுப்பு தினம்” என்று அறிவித்துள்ளார்.
● இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான சவால்களைச் சந்திக்கும் என்று அந்நாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
● ஹங்கேரி இந்த ஒப்பந்தத்தை 15 -0 கோல் கணக்கில் அமெரிக்கா வென்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.
● ஹங்கேரி பிரதமர் திரு.ஆர்பன், ஒரு படி மேலே போய் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் திருமதி. உருசலா வான் டேர் லேயனை காலைச் சிற்றுண்டியாக திரு. டிரம்ப் உண்டு (செறித்து) விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
● இத்தாலி மட்டுமே இதைத் தாங்கிக் கொண்டு செயல்பட இயலும், ஆனால் முழு விபரங்களையும் படிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.
● ப்ரூசேல்ஸூம், வெள்ளை மாளிகையும் ஒப்பந்தத்தில் உள்ள வரிகள் குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.
● எஃகு, அலுமினியம் போன்ற உலோகங்கள் விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்களின் கை ஓங்கி உள்ளதாக அமெரிக்க தொழில் துறை வரவேற்றுள்ளது.
● ஐரோப்பிய வாகன உற்பத்தித் துறை, எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
● #MAGA என்கிற கோஷத்திற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பர ஒப்பந்தம் நடைபெற சிறிது காலம் பிடிக்கும். அப்படியே 15%-25% வரி விதிப்பு நாளை முதல் அமலானாலும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 6% – 12% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
● இணைப்பில் உள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி புதிய வரி விதிப்பில் கிட்டத்தட்ட 50% ஐ இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களும், 30% அந்நாட்டு நுகர்வோர்களும், 20% வரை உற்பத்தி அல்லது ஏற்றுமதி செய்யும் நாடு ஏற்றுக் கொள்ளும் என்றும் தகவல்கள் உள்ளன.
ஆக, தமிழக ஊடகங்கள் மற்றும் பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டும் பதிவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது மனதிற்கு நல்லது. உங்களை மேம்படுத்தும் நல்ல தகவல்களைத் தேடிப் படியுங்கள்.
- சக்ரவர்த்தி மாரியப்பன்





