
பற்றி எரியும் 88 லட்சம்!
அவன் இன்னும் திருந்தல மாமா என்பார்களே நம் பக்கத்தில், அதுபோலான வேலையை பார்த்து வைத்து இருக்கிறது அமெரிக்க டிரம்ப் நிர்வாகம்.
அமெரிக்கவுக்குள் உள்நுழைய இருக்கும் H1B விசாவிற்கான கட்டணம் 218 டாலர்களில் இருந்து ஜஸ்ட் ஒரு லட்சம் டாலர்கள் உயர்த்தி இருக்கிறார்கள். அத்தோடு கூடவே இந்தியா மீதான 50% வரி விதிப்பை 25% எனும் அளவிற்கு திரும்ப பெற இருப்பதாக அதிரடி காட்டி இருக்கிறார்கள். சரி அது எப்போது என்றால், உடனடியாக இல்லை நவம்பர் மாதத்தில் இருந்து தான் இந்த வரிவிலக்கு என்கிறார்கள்.
ஏன் இத்தனை தகிடுதத்தங்கள்?
எல்லாம் மூன்று கால்கள் வகையறா சமாச்சாரம் தான். அதாவது அவர் பிடித்த முயலுக்கு! சரி என்னதான் செய்ய நினைக்கிறார் டிரம்ப்? அது அவருக்கே தெரியவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!
ஏன்? இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நண்பர் என்றவர், தனது கூட்டாளியாக உலக அரங்கில் காட்ட நினைக்கிறார். அதற்கு நம் இந்திய தரப்பில் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. இது நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே வெளிப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள, தலைகீழ் நின்று கேட்டு பார்த்தும் நாசூக்காக நம்மவர் மறுத்து இருக்கிறார் அன்று. இது அந்த சமயத்தில் இருந்தே நீறு பூத்த நெருப்பாக கனன்று வந்தது.
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று சமயத்தில் உடனடியாக வாழ்த்துக்களை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி நிதானமாக நடந்து கொண்டார் இவர்.
இதனையும் குறித்து கொண்டது டிரம்ப் தரப்பில். இந்த பதவி ஏற்பு விழாவிற்கு நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தான் கலந்து கொண்டார். ஆனால் அங்கு வைத்தே ஒரு திரிசமன் வேலையை பார்த்து இருந்தனர் டிரம்ப் தரப்பில். இது அவருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. காலிஸ்தான் இயக்க தீவிரவாதி என அறியப்பட்ட
குருபத்வந்த் சிங் பன்னூன் என்பவரை பகிரங்கமாக விழாவில் கலந்து கொள்ள அனுமதித்து, நம் இந்திய தரப்பில் நீண்ட நாள் கோரிக்கையான அவனை அவனது தீவிரவாத நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவிடம் ஒப்படைக்க கோரியதை கிடப்பில் போட்டனர். போதாக்குறைக்கு அவனை கொல்ல முயன்றதாக இந்தியர் இருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களில் வரை சென்றது. அமெரிக்க தரப்பில் இது இந்திய ரா வின் திட்டமிடலில் நடைபெற்ற ஒன்று என்றனர்.
இத்தனைக்கும் இந்திய அமெரிக்க இடையே கைதிகள் பரிமாற்ற சட்டம் அமலில் இருக்கிறது. ஆன போதிலும் அமெரிக்க அரசின் நிர்வாகம் அவனுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
முதல் கோணல் முற்றும் கோணல்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்கு சென்ற நம் ஜெய்சங்கருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அனைவரும் எழுந்து நின்று டிரம்ப்புக்கு மரியாதை செய்த சமயத்தில் இவர் மாத்திரமே அமர்ந்து இருந்தது அன்றே பெரும் பேசுபொருள் ஆனது. போதாக்குறைக்கு அவர் பார்க்க இவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தது டிரம்ப்பை முகம் சிவக்க வைத்தது. இன்றளவும் இவையெல்லாம் இணையத்தில் காணக் கிடைக்கிறது.
ஜனவரி மாதம் 20 நடந்தது இன்றைய செப்டம்பர் மாதம் 20 வரையில் இன்னமும் வீரியம் குறையாமல் முறைத்துக் கொண்டு தான் நிற்கிறார் அவர்.
இதனிடையே நம் இந்திய பிரதமரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404 மற்றும் F414 போர் விமான இஞ்சின்களுக்கான விற்பனையை துரிதப்படுத்திய கோரிக்கை இன்னமும் அப்படியே தான் இருக்கும் படி பார்த்துக் கொண்டு வருகிறது டிரம்ப் தரப்பில்.
இத்தனைக்கும் நிர்ணயம் செய்யப்பட்ட காலக் கெடுவை தாண்டி 36 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதை சுட்டிக் காட்டியும் சட்டை செய்யவில்லை அவர்கள். இது தான் ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் நம் இந்திய தரப்பில் வெளிப்பட்டது என உலக வல்லுநர் பலரும் அவதானிக்கிறார்கள்.
எப்படி?
முதலில் ஆப்ரேஷன் ஸிந்தூர் பின்னணியில் சுமார் 400 பொறியாளர்களின் அயராத முயற்சியினால் உண்டாக்கப்பட்ட ஒன்று. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய F 16 விமானங்கள் நிலைநிறுத்தி வைத்திருக்கும் ஷெல்டர்களை குறி வைத்ததை மோப்பம் பிடித்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இடம் மாற்றிக் கொண்டே வந்தது. இந்திய தரப்பில் பொறுமையாக அவை அனைத்தையும் கணக்கிட்டுக்கொண்டே வந்திருக்கிறார்கள். உத்தரவு கிடைத்ததும் துல்லியமாக அடித்து இருக்கிறார்கள். ஐந்து விமானங்களும் காலி!
இவையெல்லாம் போதாதென்று அமெரிக்கா பின்வாசல் வழியாக வழங்கியிருந்த அணுஆயுத விவகாரங்களை அவர்கள் யோசனைப் படி சேமித்து வைத்திருக்கும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலையடிவாரத்தை அதிரடியாக தாக்கியது நம் இந்திய தரப்பில். சேமிப்பு கிடங்கில் சேதம்!
ஆடிப் போனது அமெரிக்க நிர்வாகம். உலகமும் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருத்தரும் கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அதிகாரபூர்வமாக பாகிஸ்தானிடம் அவையெல்லாம் இல்லை என்பதை நன்கு உணர்ந்து இருந்தனர் பலரும். இதுதான் மஹா சிக்கலை உண்டாக்கி இருந்தது டிரம்ப் நிர்வாகத்திற்கு.
படு சாமர்த்தியமான விஷயத்தை நம்மவர்கள் செய்திருந்தனர் அந்நாளில். போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ள ஆலாய்ப் பறந்த அமெரிக்காவை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தது நம் இந்திய தரப்பு.
‘அடடா. நாட்டை பாதுகாக்கின்ற பொறுப்பை இந்திய ராணுவத்திடம் கொடுத்து விட்டோமே! நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் பாகிஸ்தானை‘,’ என்றனர். வரலாற்றில் இது புதிய முறை. அசட்டையாக அமெரிக்கா இதில் உள்நுழைந்து பாகிஸ்தானை விட்டுப் பேசியது. தடாலடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் தன்னால்தான் என விடாமல் அலப்பறை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தது.
விஷயம் என்னவென்றால், போர்ப் பிரகடனம் செய்யாமல் நம் இந்தியா தனது ராணுவத்திற்கு நாட்டைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஒப்படைத்தது. அவர்கள் தன்னிச்சையாக வேண்டிய விஷயங்களை கவனித்துக் கொண்டனர். அப்படித்தான் இது பார்க்கப்படும். இதில் மற்றோர் நாடு தலையிடும் பட்சத்தில் அவர்கள் தான் போர்ப் பிரகடனம் செய்ததாக ஆகும்.
இந்த நுட்பத்தில் அன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் மதிநுட்பம் வாய்ந்த திட்டமிடலில் மேற்கொண்டனர் நம் இந்திய தரப்பில். மிக மிக தாமதமாக இவற்றை எல்லாம் உணர்ந்த டிரம்ப் தரப்பில் கை பிசைந்து கொண்டு நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உலகறிந்த தீவிரவாத இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் அத்தனை பேரும் பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்படவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிகழ்விலும் சரி, பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் சீருடையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. அப்படி என்றால் அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு நேரடியாக ஆதரவு தருவதாக சர்வதேச அளவில் கொண்டு செல்ல முடியும் என்பதை நம் இந்திய தரப்பில் சுட்டிக் காட்டியதும் ஆடிப் போனது டிரம்ப் நிர்வாகம்.
ஏனெனில் இவையெல்லாம் அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க நீதிமன்றங்களில் தடைசெய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும். வழக்கு என ஒன்று தொடர்ந்தால் டிரம்ப் ஜெயிலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது போகலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்! இவையெல்லாம் வெள்ளை மாளிகையை கதி கலங்க வைத்திருக்கிறது.
இது போல் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 17 நிரூபிக்க முடிந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கிறது. கட்சியைத் தடை செய்யும் விவகாரமான சில குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும் என்கிறார்கள். இவையெல்லாம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யும் அளவில் பூர்ணமாக நிறைய ஆதாரங்களுடன் பிரபல இந்திய வம்சாவளியினர் நான்கு வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இனி அமெரிக்க பூச்சாண்டி எடுபடாது என்கிறார்கள் அவர்கள்.
இவற்றை எல்லாம் உணர்ந்த டிரம்ப் நிர்வாகம் உலகின் இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஒரேயொரு அணு ஆயுத நாடான பாகிஸ்தானை சவுதி அரேபியாவின் கைகளில் பிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் மீது ஒரு கண் வைத்து இருக்கும் துருக்கி அதிபர் ரெசிப் தையுப் எர்துவான் (எர்டோகன்) கைகளுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் மற்றும் நிர்பந்தமும் அமெரிக்காவுக்கு உண்டு.
இடியாப்பம் சிக்கலில் சிக்கி சின்னா பின்னம் ஆகும் நிலையில் அமெரிக்க அரசு நிர்வாகம் திண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையிலும் இந்தியாவிடம் இறங்கி விடக் கூடாது என்பதற்காக ஈரானிய சபஹார் துறைமுகத்தில் இந்திய முதலீட்டு திட்டங்களுக்கு தடுக்கும் விதத்தில் சில தகிடுதத்தங்களைச் செய்து சீனாவை குஷிப் படுத்திப் பார்க்க, கண்டுகொள்ளவில்லை ட்ராகன் இம்முறை.
இருண்டு கிடக்கிறார் டிரம்ப். போகப் போக படு பாதாளத்தில் அவர் சரிவதை நம் கண்கூடாகப் பார்க்க இருக்கிறோம். இங்கு உள்ளவர்கள் பலருக்கும் இது புரியாமல் அமெரிக்க வர்த்தகம் நரேந்திர மோடியால் போயிற்று என கதை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம்! அமெரிக்காவை தாங்கிப் பிடிக்க இன்னும் எத்தனை கென்னடி வந்தாலும் இனி அது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை! அதுபோலவே அமெரிக்க வரலாற்றில் மிக மிக தூற்றப்படும் அதிபராக டொனால்ட் டிரம்ப் மாற இருக்கிறார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.
நம் இந்திய ராஜதந்திர நடவடிக்கைகள் அத்தனை நேர்த்தியான ஒன்று. இனி எந்த நாளும் இந்தியா இறங்கிப் போகாது. அமெரிக்கா இறங்கி வருவதைத் தவிர வேறு மார்க்கமே அவர்களுக்கும் இல்லை என அடித்துச் சொல்லலாம்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்





