என்டிடிவி.,யின் ரூ.900 கோடி வரி ஏய்ப்பு: பெண்களை வைத்து அதிகாரியை மடக்குவதாக அம்பலப்படுத்துகிறார் எஸ்.குருமூர்த்தி

வணிகம்

s.gurumurthy - 2026

சென்னை:

புது தில்லியில் இருந்து இயங்கி வரும் என்.டி.டி.வி.,யின் வரி ஏய்ப்பு முயற்சிகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.

அதில், என்.டி.டி.வி., ரூ.900 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப் பட்டதாகவும், அதனை வெளிப்படுத்திய வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவாவை இரு பெண்களை வைத்து என்.டி.டி.வி பொய் பாலியல் புகார் அளித்து மடக்க தொடர்ச்சியாக முயன்று வருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவுகள்…

வருமான வரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இருவர் என்டிடிவி சானலுக்கு, ஆதரவாக அவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சஞ்சய் ஸ்ரீவஸ்தவா மீது அவர்கள் இருவரும் பாலியல் புகார்களைக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் அளித்த பாலியல் புகார்கள் பொய்யானவை என்பது தெரிய வந்துள்ளது. பொய்ப் புகார் அளித்த அவர்கள் அது குறித்து அமைக்கப்பட்ட புலனாய்வு கமிட்டிக்கு முன்னர் ஆஜராகவில்லை.

அந்தக் கமிட்டி, 9.12.2012ல் ஸ்ரீவஸ்தவா மீது கொடுக்கப்பட்ட அந்தப் பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தெரிவித்தது. அவர்கள் குறித்த ஸ்ரீவஸ்தவாவின் கடிதங்கள் பற்றிய விசாரணையில் அவை அவதூறானவை என்பது தெரிந்தது.

அந்தப் பெண்கள் அவருடனோ, அவருக்குக் கீழோ ஒருபோதும் பணியாற்றவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இதற்காக 5 நபர் கொண்ட கமிட்டி ஸ்ரீவஸ்தவாவை விசாரித்தது. அவர்களில் 4 பேர் பெண்கள். இருப்பினும் அந்த இரண்டு பெண்களும் அரசிலுள்ள முக்கிய நபர்களைச் சந்தித்து ஸ்ரீவஸ்தவா குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.

சிபிடிடி (செண்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்சேஷன்) யில் உள்ள ப.சிதம்பரத்தின் கிடுக்கிகள் அவர்களை ஆதரித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசில் உள்ள ஒரு சில நண்பர்களின் துணையுடன் செயல்படும் என்டிடிவிக்கு எதிராக ஸ்ரீவஸ்தவா ஒற்றை நபராகப் போராடி வருகிறார். என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர்.

என்.டி.டி.வி ரூ.900 கோடி வரி ஏய்ப்பு முறைகேடு மற்றும் நிதி முறைகேடு செய்துள்ளதை ஸ்ரீவஸ்தவா ஆதாரமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஸ்ரீவஸ்தவா தங்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பொது நல மனு கொடுத்தனர். இதில் எங்கே பொது நலன் உள்ளது தெரியவில்லை.

அந்த மனுவை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. இப்போது, அவர்கள் புதிதாக ஒரு மனு அளித்துள்ளனர். அவர்களின் மதிப்பீட்டு உத்தரவுகள் விலக்கப்பட வேண்டும் என்று. நீதித்துறை வரலாற்றில் இதுவரை, பொது நல மனு மூலம் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டு தனிநபர் நலனுக்கான நிவாரணம் பெறுதல் என்பது நடந்திராதது. இந்த விவகாரத்தில் பெரிய ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.

உண்மையைச் சொன்னால், அது ஊடக ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துவிடும் என்பதைக் காரணம் காட்டி வாய்மூடியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.