
2018-19 முதல் புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என மத்திய அரசு டிசம்பர் 12ஆம் தேதி தெரிவித்தது.
2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில், அதிக மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி அண்மையில் நாடாளுமன்றத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய பின்னர், மோடி செய்தி நிறுவனம் ஒன்றிடம் குறிப்பிடுகையில், மக்கள் சிலர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினார். மதிப்பு கூடுதலான ரூபாய் நோட்டுகளை பயங்கரவாத நிதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றுக்காக பதுக்கி வைப்பதற்கு பயன்படுத்தியதாகவும் தகவல் உள்ளது என்று கூறினார்.
100க்கு மேல் கரன்சி நோட்டுகள் இல்லாத அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளை உதாரணம் காட்டிய சுஷில் குமார் மோடி, மக்கள் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளைப் புழங்க வேண்டும் என்பதால், 2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக தடை செய்வது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
இதனிடையே, டிச.12 திங்கள் அன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு, 2018-19 முதல் புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் (என்ஐசி) ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் பங்கு 2020 இல் 22.65% லிருந்து மார்ச் 2022க்குள் 13.8% ஆகக் குறைந்துள்ளது. ரூ 500 நோட்டுகளின் பங்கு 2020 மற்றும் 2022 க்கு இடையில் 29.7% இலிருந்து 73.3% ஆக அதிகரித்துள்ளது.
“ஒரு குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது என்பது, பொதுமக்களின் பரிவர்த்தனை தேவையைப் பொருத்தது. பரிவர்த்தனையை எளிதாக்குவதற்கு, தேவையான மதிப்பிலான நோட்டுகளைப் பராமரிக்க இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) கலந்தாலோசித்து மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. 2018-19 முதல் ₹2000 மதிப்பிலான நோட்டுகளை அச்சிடுமாறு அச்சகங்களுக்கு புதிய கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. மேலும், ரூபாய் நோட்டுகள் அழுக்கு அல்லது சிதைந்ததால் அவை புழக்கத்தில் இல்லை, ”என்று நிதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
“31.03.2020 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளின் (NIC) மதிப்பின் அடிப்படையில் ₹ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் பங்கு 22.6% ஆக இருந்தது. 31.03.2022 நிலவரப்படி, மொத்த என்ஐசியின் மதிப்பின் அடிப்படையில் ₹ 2000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் பங்கு 13.8% ஆக இருந்தது. 31.03.2000 இல் மொத்த NIC மதிப்பின் அடிப்படையில் ₹500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் பங்கு 29.7% இலிருந்து 31.03.2022 அன்று 73.3% ஆக அதிகரித்துள்ளது.
நாணயத்திற்கான தேவை என்பது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகிதத்தின் அளவு உட்பட பல மேக்ரோ-பொருளாதார காரணிகளைப் பொறுத்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு நாணயத்தின் தேவையையும் பாதிக்கிறது” என்றார் அவர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2000 நோட்டினை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டும், புதிய வடிவிலான ரூ.500 நோட்டும் ரிசர்வ் வங்கியால் வெளியிட்டது. அண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ரூ. 2000 நோட்டு புழக்கத்தில் குறைந்து வருவது குறித்தும், அச்சடிக்கப்பட்டு வருகிறதா என தகவல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேட்கப் பட்டதில், ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், கடந்த 31.3.2020-தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை. அதற்கு முன்னதாக 2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.
புழக்கத்தில் உள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 31.3.2020 ல் 22.6 சதவீதமாக இருந்து 31.3.2021 ல் 13.8 சதவீதமாக சரிந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 – 2020ம் நிதியாண்டிலிருந்து ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது