
சென்னை:
திருப்பதி சென்று மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது மாதிரி உள்ளது இன்றைய இசையில் நிலைமை என்று இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக, ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இவர், தன் ஒலிப்பதிவுக் கூடத்தில் தனது இசைக்குழுவைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது…
“நான் இசையமைத்த அந்த நாற்பது வருட காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. இசைக்கலைஞர்கள் எல்லாரும் முழுதாக அமர்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பதெல்லாம் இனி இந்த உலகில் நடக்கப் போவதில்லை, அந்தக் காலக்கட்டம் முடிந்துவிட்டது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் இல்லை, இசை அமைப்பவர்கள் இல்லை, இசை வாசிப்பாளர்கள் இல்லை, பாடுபவர்கள் இல்லை. சும்மா ஏதோ செய்து கொண்டிருக்கிறோம்.
சினிமாவில் வந்து கைய கால ஆட்டுகிறது போல், சண்டை போடுபவர்கள் எல்லாம் சண்டையா போடுகிறார்கள்? அது மாதிரிதான் இங்கே பாடுறவனும் பாடப் போவதில்லை. ஏனென்றால் நல்ல டியூன் இல்லை. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது, எத்தனை ராகங்கள், எத்தனை கலப்புகள், எவ்வளவு வாத்தியக் கருவிகள், வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனை பாவங்கள், எத்தனை உணர்வுகள், எத்தனை உணர்வு பூர்வங்கள்… எல்லாம் போயாச்சு.
திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது போல்தான் இருக்கிறது இன்றைய இசையின் நிலை. இப்போது இசையுலகத்தில் இசையமைப்பாளர்களே கிடையாது என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க இதே நிலை தான். இசை உலகம் சிதைந்துவிட்டது என்றார் வருத்தத்துடன்!



