
எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறது. லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்திய சீன ராணுவ அதிகாரிகள் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அங்கு ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியது. இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் சீனப் பொருட்களை தடை செய்யவேண்டும் என்கின்ற ஒரு முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குறிப்பாக சீனாவின் செயலிகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் உபயோகத்தில் உள்ளது. இவற்றை உபயோகிக்க வேண்டாம் என்கின்ற குரல் தற்போது அதிகமாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் உபயோகித்து வந்த சீன செயலிகளான ஹலோ மற்றும் டிக் டாக் இரண்டையும் அன்இன்ஸ்டால் செய்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய இந்த இரண்டு செயலிகளையும் அன்இன்ஸ்டால் செய்து விட்டேன். நீங்கள் ? என்கின்ற ஒரு கேள்விக்குறியுடன் தன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஜிப்ரானைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்து திரைத்துறையினர் சீன செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 52 சீன செயலிகளை ரத்து செய்வதற்காக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதமே சீன செயலியான டிக்டாக் மில்லியன் கணக்கில் இந்தியர்களால் அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட சூழலில் தற்பொழுது இந்த மோதலுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் டிக் டாக்கை அன்இன்ஸ்டால் செய்வார்கள் என்ற சூழலும் உருவாகியுள்ளது.
Deleting my accounts in #TikTok #Helo . You ? pic.twitter.com/uMopEXM4bZ
— Ghibran (@GhibranOfficial) June 18, 2020