தமிழகத்தில் மக்களை கவர்ந்த நடிகர் எல்லோராலும் செல்லமாக சின்னக்கலைவாணர் மரங்களின் காவலர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக் கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று அவரது ரசிகர்கள் அனுஷ்டிதனர்
இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்தார்.விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு. இவரது சொந்த ஊர் கோயில்பட்டி அருகே உள்ள இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார்.ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது.இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர்
1987ல் தனது மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார்.அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் குடியேறினார்.அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி, மறைந்த பிரசன்னா குமார் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக்குத் தேவை சிரிப்பு மட்டுமல்ல, சிந்தனையும் தான் என தனது ஒவ்வொரு வசனத்திலும் மக்கள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்த நடிகர்,
நகைச்சுவையால் மக்களை மகிழ்விப்பதோடு மட்டும் நின்று விடாமல், மூட நம்பிக்கைகளை முற்போக்கு சாட்டையால் அடித்தவர் நடிகர் விவேக் ஆவார்.
யாரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் அரசியல் ஊழல்கள் குறித்து திரைப்படங்களில் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வெகு சில கலைஞர்களில் விவேக்கும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
90களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி…கடின உழைப்பு எனும் ஏணியால் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகி வெற்றிக் கனியைப் பறித்த நடிகர் விவேக் சுமார் 220 திரைப்படங்களில் நடித்து ஏராளமான விருதுகள் பெற்று அசத்தியுள்ளார்.மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக அவருக்கு 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்ட விவேக் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நட வேண்டும் என்ற முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கனவை நெஞ்சில் ஏந்தி தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளையாக மாறினார்
நடிகர் விவேக் கடந்த ஆண்டு இதே நாளில் மாரடைப்பால் மண்ணை விட்டு மறைந்தாலும், நகைச்சுவை கலைஞனாக மக்கள் மனதிலும் வனங்களின் காதலனாக மரங்களின் நிழல்களிலும் விவேக்கின் ஆன்மா இன்றும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.அவரது ரசிகர்கள் இன்று அவரை நினைவுகூற மறக்கவில்லை பல இடங்களில்.






