கமல்ஹாசன் இந்தியாவே பிரமித்துப் பார்க்கும் சூப்பர் ஸ்டார். இவரின் மனைவி ஊர்வசி. இவருக்கு ஒரு ஆண்பிள்ளை. கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் பேமிலி மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு இருந்து வருகிறது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு எழ, ஜெயராம் ஒரு கட்டத்தில் கமலை சந்தித்து உங்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறார் என ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். இதைக் கேட்ட பிறகு எப்படி தூக்கம் வரும்? அவர் யார் என்று தேட பார்வதி மேனன் அறிமுகமாகிறார். கமலுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கமலின் மாமனார் அவர் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறார். ஆனால், அவர் அதைச் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்கிறார். பார்வதி மேனன் கமலை ஒரு வில்லனாகவே பார்க்கிறார். இதற்கிடையில் கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இன்னும் சில நாட்களில் இறக்கப் போவதாக மருத்துவர்கள் கூற, அதற்குள் தன் ரசிகர்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவைப் படத்தை கொடுக்க வேண்டும் என தன் உண்மையான ஆசான் கே.பி.யிடம் கேட்கிறார். ஆனால், கே.பி.க்கும் கமலுக்கும் சற்று உரசல் முன்பே இருக்க, இதற்கு அவர் சம்மதித்தாரா? கமல் குணமானாரா? தன் பெண் பிள்ளையிடம் நற்பெயர் வாங்கினாரா? என்பதை மிகவும் உணர்ச்சி முடிச்சுகளாகக் கூறியுள்ளனர். உத்தமன் என்கிற எட்டாம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா ஹீரோவாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் கமல். கமல் ஒரு மகா கலைஞன் என்பதை இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஏதோ கெஸ்ட் ரோலில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோவார் என நினைத்து செல்பவர்களுக்கு, படம் முழுவதும்… முழுக்கவே வந்து இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படத்தில் தனியாக இவர்தான் நாயகி என்று யாரையும் சொல்லி விட முடியாது. முக்கியமான நான்கு பெண் கதாபாத்திரங்களுமே கதாநாயகிகள்தான். ஒருவர் கமல்ஹாசனின் கள்ளக் காதலி ஆன்ட்ரியா. இரண்டாமவர் கமல்ஹாசனின் மனைவி ஊர்வசி. மூன்றாமவர் கமல்ஹாசனின் மகள் பார்வதி. நான்காமவர் கமல்ஹாசனின் திரையுலக ஜோடி பூஜா குமார். அவரவர் கதாபாத்திரங்களில் நால்வருமே ‘நச்’ என்று நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைப்புயலும், இசைஞானியும் சேர்ந்து செய்த கலவை போல் மனதை வருடி செல்கிறார். ஷம்தத்தின் ஒளிப்பதிவில் வரலாற்று காட்சிகள் அசத்தல்… கமல் ரசித்து எழுதிய திரைக்கதையை அப்படியே இம்மி பிசகாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். மொத்தத்தில் ‘உத்தமவில்லன்’ அனைவரும் ரசிக்கத்தக்க உத்தமமான வில்லன்…
உத்தம வில்லன் – திரை விமர்சனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari