சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு: விஜய்க்கு போதிய ஆதரவு இல்லை!

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன. மற்றொருபுறம், தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களும், பண்பாட்டு மக்கள் தொடர்பகமும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் நடிகர்கள் அரசியலுக்கு வந்து தனி கட்சி தொடங்கினால் ஆதரிப்பீர்களா என்ற கேள்வி உட்பட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்த கேள்விக்கு ஆதரிக்க மாட்டோம் என்று 65.3% பேர் கூறியுள்ளனர்.

மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ற கேள்விக்கு 17.2% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல் ஹாசனுக்கு 10% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் நடிகர் விஜய்க்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 27 பேர் இந்த கருத்து கணிப்பை நடத்தினார்கள். மாவட்டந்தோறும் தலா 5176 பேரிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.