நித்யஸ்ரீ, அருண், அருணா சாயிராம்… இந்த கோஷ்டிகள் எல்லாம் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதைப் பற்றி சற்றுப் பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
ஷேக் சின்ன மௌலானா- பிரபல நாதஸ்வர வித்வான். கர்நாடக இசையிலும், தியாகையர் கிருதிகளிலும் ஊறித் திளைத்தவர். ஸ்ரீரங்கம்தான் அவருடைய வாசஸ்தலம். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் ஆஸ்தான வித்வான்… இப்போதும் அவரது வாரிசுகள் மெஹ்பூப் சுபானி, காசிம் (பெயர்கள் மிகச் சரியாக நினைவில்லை) நாதஸ்வர வித்வான்கள்!
அப்போது இந்தப் பிரச்னை எழவில்லை ஏன்? ஷேக் சின்ன மௌலானா எந்த அளவுக்கு Devoted இஸ்லாமியரோ, அதே அளவுக்கு Devoted நாதஸ்வரக் கலைஞர் – அதாவது அவர் இரண்டு முனைகளிலுமே “ஆத்மார்த்தமாக”- செயல்பட்டவர்.
காசு – விளம்பரம் – Branded Sponsorship – … போன்ற தளங்களில் அவர் இயங்கவில்லை.
கவி. கா.மு. ஷெரீஃப் எழுதிய பாடல்தான் திருவிளையாடல் படத்தில் பிரபலமான –
“பாட்டும் நானே, பாவமும் நானே”- பாடல். அது பிரச்னை ஆகவில்லை – ஏன்? கா மு ஷெரீஃப் போன்றவர்கள் இலக்கியத்தை, எழுத்தை ஒரு தவம் போலவே மேற்கொண்டவர்கள்!
ஆக விஷயம் இதுதான் – ஒருவர் ஆத்ம பூர்வமாகத் தனது கலை முயற்சியில் ஈடுபடுகிறாரா, அல்லது இன்று “Professional”- என்று நாகரிகமாக அழைக்கப்படும் “தொழில் ரீதியாக”- (அதாவது பச்சையாகச் சொன்னால் காசை எதிர்பார்த்து) ஈடுபடுகிறாரா என்பதே அவர்கள்பால் மக்களுக்கு மதிப்பையோ, மதிப்பின்மையையோ ஏற்படுத்துகிறது.
இது இசைத்துறையில் மட்டுமில்லை, பேச்சு, ஓவியம், சிற்பம்…- என்று எல்லாக் கலை வடிவங்களிலும் இந்தப் “பிழைப்பு வாதம்”- தலை தூக்கி உள்ளது.
ஒரு இலக்கியப் பேச்சாளர் – கர்ணனின் குண தர்மங்களை அப்படி விவரித்து அற்புதமாக ”ஆன்மீகச் சொற்பொழிவு”- நிகழத்துவார்! பிரமித்துப் போய், மெய்மறந்து கை தட்டி ரசிக்கிறோம். அடுத்த மாதமே அவர் கழகப் பகுத்தறிவு மேடையில் “தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன்”- என்ற தலைப்பிலும் உரை வீச்சு நிகழ்த்துவார்!
ஒருமணி நேரப் பேச்சுக்கு இவ்வளவு என்று காசு, போக வர ஏசி ரயில் டிக்கெட், இன்ன பிற உபசரணைகள் செய்து கொடுத்தால், அவர் “அமிர்தாஞ்சனமா? ஜண்டு பாமா?”- என்ற தலைப்பில் கூட விவாதம் நடத்துவார்!
மூலைக்கு மூலை ஈவேரா சிலைகள் தமிழகத்தில் நிற்கின்றன. அவைகளை வடித்த சிற்பிகள், தங்கள் வாழ்நாளில் முருகர், கிருஷ்ணர், சரஸ்வதி… – இன்னபிற இறை உருவங்களை வடிக்காமலா இருந்திருப்பார்கள்? “ராமனையும், கிருஷ்ணனையும் செதுக்கிய உளியால், கடவுளே இல்லை என்று சொன்ன ஈவேரா சிலையைச் செதுக்க மாட்டேன்” என்று எந்த ஸ்தபதியாவது சொன்னாரா?
ஆன்மீக விஷயங்களுக்கு என்றே படம் வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். முன்பு கொண்டயராஜூ, ராமலிங்கம், சில்பி போன்றவர்கள் இறை பணிக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இப்போதுள்ள பல ஓவியர்கள் Professional ஆக இருப்பவர்கள் – அவர்களை நாம் குறை சொல்ல ஒன்றுமில்லை. இன்றைக்கும் அவர்கள் ஆன்மீகத் தொடருக்கும் ஓவியம் வரைவார்கள் – அதே நேரம் ஈவேரா வாழ்க்கை வரலாறு ஒரு ஆண்டு முழுவதும் தொடராக வாராவாரம் வெளியிடுகிறோம் – அவருடைய இளமைப் பருவம் முதல், இறுதிக் காலம் வரை வெவ்வேறு புகைப்படங்கள் – சம்பவங்களை வைத்து ஓவியம் வரையுங்கள் – மொத்தமாக இத்தனை ஆயிரம் ரூபாய் உங்கள் சன்மானம் என்றாலும் அவர்கள் வரைவார்கள்.
வக்கீல் தொழிலிலும் காசு கொடுத்தால் போதும் – இந்திரா காந்தி கொலையாளிக்காக வாதாடிய ஜேத் மலானி போன்றவர்கள் இல்லையா? நாளைக்கு மல்லையாவுக்கு வாதாட ஒரு பெரிய வக்கீல் முன்வர மாட்டாரா?
ஆக, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்வது Profession. அதில் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். அதில் மிக Sincere ஆக இருப்பார்கள்.
ஆன்மீகத்தில் மட்டும்தான் என்றில்லை – நாத்திகத்தில் கூட உண்மையான ஈடுபாடு, ‘தொழில் சார்ந்த’ ஈடுபாடு என்று உண்டு. S S ராஜேந்திரன் என்ற நடிகர் திமுக காரர்! கடைசி வரை எத்தனை ரூபாய் கொடுத்தாலும் பக்திப் படங்கள், இறை வேடங்களில் நடிக்க மாட்டேன் – என்று உறுதியாக இருந்தார்! அதுவே மணிவண்ணன் போன்ற நபர்கள் ‘பெரியாரிசமும்’ பேசுவார்கள் – ‘காட்சிக்குக் கதையபைப்புக்குத் தேவைப்பட்டால்’ விபூதியும் பூசிக் கொள்வார்கள்.
நமது வருத்தம் அருணா சாயிராமும், நித்ய ஸ்ரீயும், அருணும்… – கிறிஸ்தவப் பாடல் பாடுகிறார்கள் என்பதல்ல. அதற்கு அவர்கள் தாங்கள் தவம் போல் ஏற்றுக் கற்ற கர்நாடக சங்கீதத்தை பலி பீடமாக்கத் துணிந்து விட்டார்களே என்பதுதான். நமது சாஸ்த்ரீய இசை என்பதை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் Brand Ambassador போல மாற்றிவிட்டார்களே என்பதுதான்.
நமது சாஸ்த்ரீய சங்கீத மரபு மற்றும் வெஸ்டர்ன் கிளாசிகல் மரபு (இரண்டும் ஒன்றுக்கு ஒன்று உயர்ந்தது / தாழ்ந்தது என்று ஒப்பீடாகச் சொல்லவில்லை) – இரண்டின் வேறுபாடுகள் (மேற்கத்திய இசையிலும் சர்ச் மியூசிக் என்று இருப்பதை), அவற்றின் நுட்பமான கூறுகளை இவர்கள் பொருட்படுத்தாமல் வெறும் “வாய்ப் பாட்டுக் காரர்களாக” சில படிகள் கீழே இறங்கிவிட்டார்களே என்பதே நமது வருத்தம்.
ஜெயகாந்தனின் “பாரீசுக்குப் போ”- நாவலை முழுவதும் படித்து உள்வாங்கி இருந்தால், அதில் கதாநாயகன் சாரங்கன் ‘மாடர்னிட்டி’ பற்றி ஓவியக் கல்லூரியில் பேசுவதையும், சுந்தரம் என்ற இசை விமர்சகருடன் சாரங்கன் நிகழ்த்தும் (சாஸ்த்ரீய சங்கீதம் vs வெஸ்டர்ன் மியூசிக்) கடிதத் தொடர் விவாதத்தையும் இவர்கள் ஊன்றிப் படித்திருந்தால்….
ஏசுபிரானுக்கு கர்நாடக சாஸ்த்ரீய சங்கீத உறை மாட்டாமல், வெஸ்டர்ன் கிளாசிக்கலில் இசை அமைத்திருப்பார்கள்!
அப்படி ஆத்ம பூர்வமான இசை ஈடுபாடு அவர்களை வெஸ்டர்ன் கிளாசிகலை நோக்கி நகர்த்தி இருக்கும் – இளையராஜா ‘சிம்ஃபொனி’ அமைத்ததைப் போல! ஆனால் இப்போது இவர்கள் செய்தது காசுக்காக கர்நாடக இசையில் செய்த FANCY DRESS COMPETITION!
– முரளி சீதாராமன்




