ஜன.1 முதல் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லையாம்?! மெய்சிலிர்க்கும் பாஜக.,வினரின் பகிரல்கள்! ‘ஐயோ பாவம்’ ரகம்!

Published:

bjp meme toll1 - 2026

சுங்கச்சாவடிகளில் கட்டண ரத்து என்ற போலிச் செய்தியை பரப்பும் சமூக ஊடக மீம்ஸ்…

ஜனவரி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு, ஒரே மாநில வாகனங்களுக்கு கட்டண விலக்கு, சுங்கச் சாவடிக் கட்டணமே இனி இல்லை… இப்படி விதவிதமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப் படுகின்றன. இதில் சோகம் என்னவென்றால், இதுவரை டிவி.,க்களின் டிவிட்டர் கணக்கு பதிவுகளைப் போல், பொய்யாக எழுதி பகிர்ந்து வந்தவர்கள், இம்முறை ஒரு மாலை நாளிதழில் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றதாக ஒரு தகவலைப் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்!

‘ஜனவரி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை. வாக்களிப்பீர் தாமரைக்கு’ என்கிற விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்துள்ளது. ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை!

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகிவிட்டன. கட்சிகளும் கூட்டணிகளை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ‘ஜனவரி முதல் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை. பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். வாக்களிப்பீர் தாமரைக்கே’ போன்ற விளம்பரம் சமூக வலைத்தளங்களில் சுற்றிச்சுற்றி வருகின்றது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஆனால் உண்மையில் பிரதமர் மோடி சுங்கச்சாவடி கட்டண ரத்து அறிவிப்பை வெளியிடவில்லை! இனிமேல் அப்படி ஒரு அறிவிப்பும் வர சாத்தியமில்லை! சலுகைகள் அறிவிக்கப் படலாம்; அல்லது கட்டணக் குறைப்பு வேண்டுமானால் மேற்கொள்ளப் படலாம். ஆனால் ஒட்டுமொத்த ரத்து என்பதற்கு சாத்தியமில்லை. பல வருட பராமரிப்பு ஒப்பந்தம் போடப்பட்டு சாலைகள் பராமரிக்கப் படும் நிலையில், அப்படி ஒரு அறிவிப்பு வர சாத்தியமில்லை என்பது பாஜக.,வினருக்கு தெரியாமலா இருக்கும்?!

bjp meme toll - 2026
சுங்கச்சாவடிகளில் கட்டண ரத்து என்ற போலிச் செய்தியை பரப்பும் சமூக ஊடக மீம்ஸ்…

யாரோ சிலர் போட்ட மீம்ஸ், இப்போது பாஜக.,வினரையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆர்வக் கோளாறில் அதையும் பகிர்கிறார்கள்! பாஜக.,வினர் சிலர், இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மோடியை பாராட்டியும் வருகின்றனர்.

விவரம் அறிந்த பலரும் இது போலி செய்தி என்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏற்கெனவே பிரதமர் மோடி கூறியதை திரித்து வெளியிட்ட செய்தி நிறுவனங்கள், எதிர்ப்பு அரசியல் கட்சிகள் அதனை மக்கள் மனத்தில் ஆழப் பதிய வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஊழலால் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப் பட்டுள்ள தொகை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் அது ரூ.15 லட்சம் இருப்பதற்கு சமம் என்று கூறியதை, ஏதோ இங்குள்ளவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் போடப் படும் என்று மோடி சொன்னது போல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இப்போது, வேறு ஒரு புரளியை கிளப்ப ஆரம்பித்துவிட்டனர்!

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப் பட்ட மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் இன்று நாம் கொண்டு சென்றோம். அப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பு இல்லை என்பதே நமக்குக் கிடைத்த பதில்! இருப்பினும், இதில் பாஜக.,காரர்கள் சமூக வலைதளத்தில் நம்பிக் கொண்டு என்னென்னவோ பரப்புகிறார்கள்! எனவே இதுபோன்ற பகிரல்களில் பாஜக.,வினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் இருந்து தங்கள் குடும்பத்துக்காக எடுத்து வைத்த பெரும் தொகையை ராகுல்காந்தி புயல் நிவாரண நிதிக்கு அளிக்கப் போகிறார் என்றும், கஜா புயல் நிவாரணத்துக்காக அடுத்த வாரம் நேரில் வந்து, விவசாயிகளை சந்தித்து, பாதிக்கப் பட்டவருக்கு தலா ரூ.10 லட்சம் தங்கள் குடும்ப கட்சிப் பணத்தில் இருந்து ராகுல்காந்தி வழங்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி மீம்ஸ்களாகப் பரப்பப் பட்டால், அது அரசியல் ரீதியாக யாருக்குப் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தால், இப்படி ஒரு மீம்ஸை பாஜக., காரர்கள் யார் செய்திருப்பார்கள் என்று உணர்வார்கள்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

ராகுல் காந்தி விவகாரத்தில் அப்படி ஒரு மீம்ஸ் உருவாக்கிப் போட்டால் எந்த மனநிலையில் ஒருவர் உருவாக்கிப் பகிர்வாரோ அந்த மனநிலையில்தான் எதிர்க்கட்சியினர் யாரோ வேண்டுமென்றே செய்த மீம்ஸ் இது என்றே தோன்றுகிறது!! இதன் உண்மைத் தன்மையை கூட உணராமல் பாஜக.,காரர்களும் அப்படியே பகிர்வது அவர்களின் புத்திசாலித்தனத்தையே காட்டுகிறது என்று கலாய்க்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img