‘சுகாதாரம்’ விஜயபாஸ்கர் கழற்றி விடப் படுகிறார்..? எடப்பாடியாரின் திட்டம் பலனளிக்குமா?!

Published:

c vijayabhaskar - 2026

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சர்களில் அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்றால் அது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான்..! என்னதான் கஜா புயலின் போது மின்சாரம் பாய்ந்த நிலையில் கம்பத்தில் இருந்து கீழே விழுந்த பணியாளரைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும், அது போன்ற காட்சிகள் எல்லாம் கட்சியில் விஜயபாஸ்கரைத் தக்க வைக்க உதவாதுதான்!

தர்மயுத்தம் நடத்தி ஆர்.கே.நகரில் தன்னை ஓபிஎஸ் வெளிக்காட்ட முயன்றபோது, டிடிவி தினகரன் அரசு இயந்திரத்தின் உதவியுடன் பணப்பட்டுவாடாவை பகிரங்கமாகச் செய்தார். அப்போது வருமான வரித் துறையினர் சோதனையில் பணம் பட்டுவாடா ஆவணங்கள் கைப்பற்றப் பட்ட இடம், விஜயபாஸ்கரின் வீடுதான்! இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான்பொருள்களான குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள், தடையின்றி விற்பனை செய்ய, லஞ்சம் பெற்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர்தான் முதலில் குற்றச்சாட்டுப் பட்டியலில் இருந்தது.

இந்த போதைப்பொருள் வழக்கு நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு அமைச்சரின் உதவியாளர்களிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் அழைத்தும் சி.பி.ஐ., தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
health minister vijayabaskar - 2026

குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. எனவே விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து விலக்கினால் நன்றாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாம்!

திமுக., பாமக., உள்ளிட்ட கட்சிகள், தங்கள் பங்குக்கு தினந்தோறும் இந்த விவகாரத்தில் வெளியிடும் அறிக்கைகளில், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், விசாரணை முறையாக நடைபெறவேண்டும் என்றும் கோரி வருகின்றன.

இந்நிலையில் பாஜக., அதிமுக., கூட்டணி குறித்த தொடக்க கட்டப் பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தில்லி சென்றிருந்தபோது, அவர்களிடமும் விஜயபாஸ்கர் விவகாரம் கிளப்பப்பட்டதாம். விஜயபாஸ்கரை நீக்கினால் நல்லது என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொன்னதாக முதல்வரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது விஜயபாஸ்கர் தாமாக பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப் படலாம் என்பது குறித்து எடப்பாடியார் ஆலோசித்து வருகிறாராம்!

புதுக்கோட்டை ஜார்ஜ் கோட்டையில் இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது அதிமுக., வட்டாரம்!

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Related articles

Recent articles

spot_img