செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்!

இதன் பெயர் கோலாட்டம்.. கோலாட்ட வைபவம் என்று சொல்லலாம்… இது ஒவ்வொரு கட்டத்திலும் சில மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது…

இளம்பெண்கள்… சிறுமிகள்… இல்லத்தரசிகள் என… எல்லோரும் இணைந்து செய்கிறார்கள்… இரு கைகளிலும் இரு கோலாட்டக் கோல்களைக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆடும் ஆட்டம் மட்டுமல்ல…

பெண்களுக்கே உரிய சமூக அக்கறை வெளிப்படும் வித்தியாசமான சடங்கும்தான்…! ஆம்… ஊருக்கு நன்மை வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி இது..! மகிழ்ச்சி பொங்க ஒரு பக்கம் கூடி ஆட்டம்… இன்னொரு புறம் ஊருக்கு செழிப்பு வேண்டி மேற்கொள்ளும் சமூக அக்கறை… இது பெண்களுக்கே உரிய சமூகப் பொறுப்புணர்வுதான்!

ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள வயலில் இருந்து மண் எடுத்து வருவார்கள். அதில் ஒரு பகுதியை குயவர் மூலம் பசுவாகவும் கன்றாகவும் பொம்மையாகச் செய்து வண்ணம் இடுகிறார்கள்… அடுத்து முளைப்பாரி எனப்படும் பாலிகை கரைத்தல்… தானியம் தூவி முளைகட்ட வைக்கிறார்கள்…

தொடர்ந்து பத்து நாட்கள்… முளைப்பாரியும் பசுவும் பிள்ளையும் இங்கே செங்கோட்டை சிவ மடத்தின் வாசலில் வைக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பாடல்களைப் பாடியவாறு, தங்கள் கைகளில் உள்ள கோலாட்டக் குச்சிகளை தாளத்திற்கேற்ப தட்டியபடி அவற்றைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்…

“பசுவா, பசுவய்யா’ என பாடல்கள்:… கோலாட்டத்துக்கெனவே உள்ள தனிப் பாடல்கள்… பாடப்படுகின்றன… ஊரின் ஒவ்வொரு தெருவிலும் தங்கள் தங்கள் தெருக் குழந்தைகளை ஒன்றிணைத்து பெண்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்…

சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட எண்ணெய் சிகைக்காய்ப் பொடி கொடுத்து, மதியம் அனைவருக்கும் விருந்து படைத்து மாலை பெண்கள் பலரும் இந்தக் கோலாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

பசுவும் பிள்ளையும் முளைப்பாரியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.. பின்னே கோலாட்டம் நடத்தியபடி பெண்கள் தெருக்களை வலம் வருகிறார்கள்… பிறகு, வயல் பகுதியில் இந்தப் பசுவும் கன்றும் விடப் படுகிறது… இதை எடுத்து வரும் சிறுவருக்கு புது வேஷ்டி துண்டு என பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர்… இவர்கள் மனம் திருப்தியடைந்தால், சகல தேவதைகளும் மனம் மகிழ்வுற்று, கிராமத்திற்கு நன்மை செய்வார்கள் என்பது நம்பிக்கை.

பிறகு கோலாட்டம் துவங்கிய அதே மடத்துக்கு வந்து, மங்களப் பாடல்கள் பாடி, கோலாட்டம் அடித்து ஹாரத்தி கரைத்து, கோலாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு வெற்றிலை பாக்கு என தாம்பூலம் கொடுத்து நிகழ்வை நிறைவு செய்கிறார்கள்…

இது மழைப் பொழிவுக்கும், வளமைக்கும், ஊர்ப் பொது நன்மைக்கும் செய்யும் ஒரு விழா என்று கூடச் சொல்லலாம்.. ஊர் நன்மைக்கு பெண்கள் தலையெடுத்துச் செய்யும் முக்கிய நிகழ்வு இது தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் இது அமைகிறது… இந்தப் பாரம்பரியம் தொடர இறைவனை வேண்டுவோம்..!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.