ராஜபாளையத்தில் தம்பதியர் கொலை சம்பவத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து நாலா பக்கமும் உண்மையான குற்றவாளிகளை தேடி விசாரணை நடத்தி வரும் நிலையில் அருப்புக்கோட்டையில் வயதான தம்பதியர் இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் ( 75). இவரது மனைவி குருபாக்கியம்(68). ராஜகோபால் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜகோபால் பணம் வட்டிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபாலும், அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
வீட்டின் படுக்கை அறையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

இந்த கொலைகள் குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த இரட்டை கொலையில் துப்புதுலக்க டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் சுதீர், வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா , கவுதம், நம்பிராஜன் , ராமராஜ்
ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராஜகோபால் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜபாளையம் முனியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுடன் ராஜகோபாலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அந்த பெண் இரவு நேரங்களிலும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்து சென்று அவர் கூலிப்படையை வைத்து ராஜகோபாலையும், அவரது மனைவியையும் கொல்ல திட்டம் தீட்டி அதன்படி சம்பவத்தன்று ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பின்னர் ராஜகோபால் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான ஆவணங்களை அள்ளி சென்றுள்ளதாகவும் போலிசார்ருக்கு தகவல்கள் வந்ததால் இந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராஜகோபால் வீட்டில் நகை பணம் கடன் கொடுத்ததற்கான ஆவணங்கள் கொள்ளை போனதா?அப்படியானால் அதன் மொத்த மதிப்பு எவ்வளவு இருக்கும் என போலிசார் கணக்கிட்டு வருவதாகவும் தெரிகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஓய்வதற்குள் இன்று
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யில்
ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர்கள் மீது மிளகாய் பொடி தூவி இருவரையும் கொலை செய்து நகை பணம் கொள்ளையடித்த
சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அருப்புக்கோட்டையில் எம்டிஆர் நகரை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். ஓய்வு பெற்ற ஆசிரியரான சங்கரபாண்டியன் தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணி என்பவருடன் வசித்து வருகிறார்.இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவணத்தில் பணிபுரிந்து வருகிறார். சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணியை அவரது உறவினர்களை அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் பிற்பகலில் அவரது உறவினர்கள் சங்கரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர்.அப்போது சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில் சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது தெரியவந்தது.மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியும் தூவப்பட்டு கிடந்தது.இதனையடுத்து விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் தம்பதியரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.மர்ம நபர்கள் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்தில் டிஐஜி பொன்னி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.மோப்பநாய் கொண்டும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜபாளையத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்து இன்று அருப்புக்கோட்டையில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இரு கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.இரு சம்பவத்திலும் விரைவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விடுவார்கள் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.